Monday, October 8, 2012

நட்போடு காதல் செய்வீர்!

ராத்திரி ஒரு ஒன்பது பத்து மணிக்கு துணிகளை துவச்சுக்கிட்டே வானொலியில ஏதோ பாட்டு நல்லா இருக்கேன்னு கேட்டுகிட்டு இருந்தேன். பாட்டுக்கு இடையில பயபுள்ள ஏதோ கேட்டுச்சு, திருமணத்திற்கு பின்பு நடப்பை தொடர முடியாமல் போவதற்கு காரணம் என்ன? அப்டின்னு. கேள்வி கேட்டுட்டு பாட்டு போடுவான்னு நம்பி கேட்டா உடனே ஒரு கல்யாணம் ஆன பொண்ணு.. அதுவும் காதல் கல்யாணம் செஞ்ச பொண்ணு ஏதோ அவங்களுக்கு ஒரு நண்பனா.. இப்போ கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவன் கூட பேச முடியலயா, முன்னாடியெல்லாம் எதுவானாலும் அவன் கூட தான் பகிர்துக்குமா. இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் முடியலைன்னு ரொம்ப சங்கடம பேசுச்சு. சரி இப்போவாவது பாட்டு போடுவானு பார்த்தா இல்ல, இந்த பக்கம் தொகுப்பாளர் ஏன் இப்படி நடப்பை புருஞ்சிக்க மாட்டேன்கிறாங்க அப்டி இப்டின்னு இவர் பேசி ஒரு வழியா பாட்ட போட்டாங்க.


இத்தன பேச்சு கேட்டதுக்கு அப்புறம் நமக்கு பாட்டு எங்கே கேட்க்கும், யோசிக்க ஆரம்பிச்சாச்சு .

இப்போ அந்த கணவர்கள் எல்லா அவங்க மனைவிகளை தங்கள் நடப்பை (ஆணோ பெண்ணோ) தொடர விடுறாங்க. இவங்களும் எல்லா பிரச்சன, சந்தோசம், சோகம், சண்டை எல்லாம் அந்த நண்பர்கள் கூட பகிர்த்துகிட்டா இந்த பக்கம் இவரு எதுக்கு?

அட, இது ரெண்டு பக்கமும் தான், கணவர்களை தங்கள் பிரச்சன. சோகம் எல்லா நல்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுக்கு இந்தப்பக்கம் எதுக்கு கல்யாணம் பண்ணனும், வெறும் குழந்தைக்குனு சொன்னா அப்போ இச்சைக்கு அப்டின்னு ஆகிடாது.

வள்ளுவர் வாக்கின் படி பார்த்தால்,
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு” – 1122

உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து இல்லாதது போல் இவளோடு நான் கொண்ட நட்பு அப்டின்றாறு. எந்த அதிகாரம்னா, ‘காதற் சிறப்புரைத்தல்’.

காதல் அதிகாரத்துல மடந்தையொடு கொண்ட காதல்னு சொல்லாம நட்புன்னு ஏன் சொல்லணும்?

காதல் தெரிவது புணர்தலில், நட்பு தொடர்வது பகிர்தலில். கல்யாணம் நீண்ட நெடு பயணம் என தொடர காதலோடு நட்ப்பும் தேவை என உணர்தலின் வெளிப்பாடாகவே இந்த குறளை நான் காண்கிறேன்.

நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நண்பன் ஒருவன் வேண்டும் எனில், கட்டிலை மட்டும் பகிர்ந்துகொள்ள கல்யாணம் செய்து வாழ்க்கை துணை என கொள்ள வேண்டிய அவசியம் என்ன.

நல்ல நண்பன் என தெரிந்த பின் வேறு துணை தேடி அழைவதேன்? தெரியாத ஒருவரை தெரிந்து கொள்ளுதல் நட்பின் ஆரம்பம். தெரிந்தவரை புரிந்து கொள்ளுதல் நட்பு. புரிந்து கொண்டவர் கை கோர்த்து நடக்கும் நெடு பயணம், வாழ்க்கை.

நல்ல நண்பனை கல்யாணம் செய்து கொண்டால் இந்த சங்கடங்களுக்கு வழியே இல்லையே. அதை செய்யாது வேறு சில காரணங்கள், சௌகரியங்கள் பார்த்து நாம் செய்யும் தவறுக்கு நம் துணையை இப்படி வானொலியில் வசை பாடுவது எதற்கு?

காதலனோ காதலியோ, காதலை கடந்து நட்பு பாராட்டி காதல் செய்யின், வேறு உறவுகளோடு பகிர்தல் மிக அவசியப்படாது. அவசியம் இருப்பினும் தடைகள் சொல்லாது. காதல் அழகானது, நட்போடு இருப்பின் அதுவே ஆழமானது. நட்போடு காதல் செய்வீர்.