Sunday, January 29, 2012

இன்றே செலவு செய்!

நேற்று இறந்தவன்
இன்று வருவதில்லை,
வெட்டியாய் செலவாகும் இன்று
அவனுக்காக அழுவதில்!
நாளை என்பது எவனுக்கோ எழுதப்பட்டது
இன்று என்பது மட்டுமே  நம்மோடு
நமக்காக நடந்து வருவது!
ஒரு நொடி பயத்தில் கொலையும் செய்யலாம்
துணிச்சல் இருந்தால் மட்டுமே வாழ முடியும்
இறகில்லா விட்டில் பூச்சிக்கு
நெருப்பில் கூட மோட்சமில்லை!
மரணம் என்பது எப்படியும் வரலாம் ஆனால்
வாழ்வு வரைமுறைக்கு உட்பட்டது,
முறைகளும் இன்று வாழ வழி செயும்மாறு நாம் வரைதல் நன்று!
மரணமும் முடிவல்ல,
காதலில் தோற்பது
கவிதை எழுதுவதற்காக அல்ல
நேற்றைய செலவுகள் எல்லாம் இன்று வரவாவதில்லை
மிஞ்சியது எல்லாம் வரவு என்று கொள்வதில் தவறில்லை!
யாருடைய வெற்றியையும் யாராலும் கணிக்க முடியாது
ஜோதிடமும் ஒரு நொடி கணக்கு தான்
தவறுகளுக்குச் சாத்தியம் உண்டு!
கண்ணீர் யார் தாகத்தையும் தீர்க்காது
வருந்தும் நேரம் எல்லாம் வாழ்ந்த நாளில் சேராது
வானம் எல்லை என்றால்
நிலவில் நீர் ஆராய்ச்சி நடக்காது!
தொற்றவனுக்கு வெற்றி அடுத்த குறி
வென்றவனுக்கு அடுத்த தேடுதல் வெற்றியை தக்க வைக்கும் வழி
வெற்றியோ தோல்வியோ இன்றே செலவிட்டு விடு..
செலவுகள் போக மிச்சம் இருப்பதுதான்
லாபம், நிகர லாபம்!




Saturday, January 28, 2012

என்னைத் தடுக்கும் நாள்!

ழுவது கோழைத்தனம் என்றவன் அறிஞன்..
துடைத்து விட கைகள் இருக்கும்போது
அழுவது கூட சுகம் தான் என்றவன் கவிஞன்
அந்த கைகள் இல்லாமல் போனதால் தான் அழுகிறேன் நான்..!
தனிமை எனக்குப் பிடித்த நண்பன் தான்,
அவனை பல முறை பலரிடம் இருந்து பிடித்து இழுத்து வந்திருக்கிறேன்..
இன்று அவனை என்னிடமே தேடுகிறேன்..!
என் உடல் கூட சுமை என ஆகிறது
நான்கு பேர் தூக்கிச் சென்றால் தேவலை என்றிருக்கிறது..!
அழுது அலுத்துவிட்டேன்
கண்ணீர் வரத்து குறையவில்லை..!
இதோ சிரித்துவிடுகிறேன் என்றே
என்னை நானே ஏமாற்றி நாட்களை கடத்துகிறேன்..!
எவரிடமும் புலம்ப முடியாது,
எனக்கும் அது பிடிக்காது..!
அவளால் சிரிக்க முடிகிறது
என்னால் ஏனோ முடியவில்லை..
அவளால் நடிக்கவாவது முடிகிறது
என்னால் மறந்தும் சிரிக்க முடியவில்லை..!
எங்கெங்கோ வலிகளை உணர்கிறேன்
வாழ்க்கை நெடும் பயணமாக தெரிகிறது
தனியாய் பயணிக்கவே பயம் வந்து பற்றிக்கொள்கிறது..!
என்னுடன் தான் வருவேன் என்றாள்
இப்போது என்னுடன் நடக்க மறுக்கிறாள்
ஏதேதோ சொல்கிறாள்
அந்த ஒரு நாள் வாழ்கையே போதும் என்கிறாள்
அந்த ஒரு நாள் வாழ்க்கை தான்
மீத நாட்களை நான் கடக்க என்னை தடுக்கிறது..!







Saturday, January 21, 2012

உடைந்து விழும் முதுகெலும்புகள்

ன்றரை ஏக்கர் நிலம், நாலு மாத உழைப்பு... மொத்த வருமானம் ஒன்பதாயிரம். இது உண்மை சம்பவத்தின் தழுவல் அல்ல, உண்மை.

சனிக்கிழமை மதியம் மணி மூன்று முப்பத்தி ஐந்து கை பேசி அழைப்பு மணி ஒலிக்கத் துவங்கியது. எடுக்க போகும் அவன், சேலம் அருகே பெயர் சொன்னால் தெரியாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தமிழகத்தின் தலைநகரில் தன் குடும்பம் தலைக்க எங்கோ உலகின் வேறு ஒரு கோடியில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு இங்கு அமர்ந்து வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரி.

சாமி சாப்டியா? ஒரு தாயின் வழக்கமான கேள்வி, அவளுக்கு ஹலோ எல்லாம் தெரியாது.

ம்ம்ம், நீ மா..?

ஆச்சு பா

சொல்லு மா

அது ஒன்னும் இல்ல, இந்த தடவ நடவு ஒன்னும் செரியாவரலையா... இரு நொடி இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.
அது ஏதோ கடைசிய மிசின் வெச்சு அறுத்ததால ஒரு ஒம்பதாயிரம் நின்னுருக்கு.

எ.. ஒம்பதாயிரம் தானா, என்ன ஆச்சு.. ஏ..?

போன தடவ வந்தப்ப சொன்னா இல்ல, இங்கிலீஷ் பூச்சி மருந்து எல்லாம் வேணாம். எதோ தெருஞ்சவங்க ஏழு வயசு புள்ளைக்கு இரத்தத்துல கான்சரு, இந்த நடவுல கண்ட மருந்தெல்லாம் வேணாம்னு.

ஆமா

புறவு எல்லாம் நம்ம மஞ்சலு, வேப்ப கோட்டை தான் போட்டது. ஆனா சுத்துபாட்டுல பாரு எல்லாரும் அந்த இங்கிலீஷ் மருந்துதானே தெளிக்கராவுக. பின்ன எல்லா பூச்சியும் நம்ம நெல்ல கடுச்சு புடுச்சு. அதுனாலத்தா பா

இப்ச்

இரு உங்க உங்க அப்பா பேசுறாரு.. மாமா இந்தாங்க

என்னடா, இனி எல்லா நடவு நிறுத்திடலாமா... ம்ம்ம்?

என்ன பதில் சொல்ல என யோசித்த வாரே உதடு கடித்தான்.



இவன் பதில் எதிர்பாராமல் தொடர்ந்தார் நடவு செலவு, மோட்டாரு, கரண்டு அது இதுன்னு பதினஞ்சு ஆச்சு மொத்தம், நாலு மாசத்துக்கு. பின்ன வந்தது அப்டினா இருவத்தி நாலு. அதுதா அறுவடைக்கு ஆள் விடாம மிசின் வேச்சதால பதினஞ்சு ஆச்சு இல்ல இந்த ஒம்போது வந்திருக்காது

ம்ம்ம்ம்
ஆளுக்கு இருநூத்து ஐம்பது கேட்கரானுங்க. அதுவும் சரி தான் பஸ், பால் கண்டது கலிதுனு விலை ஏறிடுச்சு இல்ல. உனக்கு அங்க பரவால இல்ல. நல்ல இருக்க இல்ல நீ?

ம்ம்ம்.. நல்லா இருகேனுங்க பா

பேசி முடித்ததும் அந்த பதில் தெரியாத கேள்வி தான் ஓடியது அவன் காதுகளில்.

என்னடா, இனி எல்லா நடவு நிறுத்திடலாமா... ம்ம்ம்?
நவதுவாரங்கள் இருந்தும் அது அவன் மனதில் மோதி மோதி எதிரொலித்தது.

தான் படிக்காது விவசாயத்தில் இருந்திருந்தால் இன்று?

நாலு மாத வருமானம் ஒன்பது ஆயிரம் தான் என்றால் இன்று என்ன சாப்பிட்டிருக்க 
முடியும்?

இப்படி நடவு நிறுத்தினால்.. நாளை விவசாயம் என்ன ஆகும்?

ஒரு மனிதனை கொன்றால் தான் இன்னொருவன் வாழ முடியும் என்கிற  நிலை ஏன்?
உலக நாடுகள் எல்லாம் தடை செய்த பூச்சி மருந்தை. இந்தியாவில் கேரளா மாநில விவசாய்கள் போராடி வேண்டாம் என்ற மருந்தை தானும் வேண்டாம் என்றதன் விளைவா இது?

ஒவ்வொரு விவசாயி இறக்கும் போதும், இப்படியாக விவசாயம் நிறுத்தப்படும் போதும் நம் வாழ்நாளில் ஒவ்வொரு வேலை உணவு குறைகிறது என்பதை நாம் உணர வேண்டிய நாள் கடந்து பல வருடம் ஆகியும் இன்னும் இதை பெரியதாய் கருதாதது ஏன்?

மேலும், இன்றையில் இருந்து ஒன்பது வருடங்களுக்கு முன்பு வரை தொழில்’ (occupation) என்ற கேள்விக்கு விவசாயம் (agriculture) என்றே இருந்தது நான் பூர்த்தி செய்த படிவங்களில் எல்லாம். ஆனால் அப்பா இறந்த பின்பு, இன்று மாறிப் போய் இருக்கிறது தனியார் (Private) என்று.

--சித்ரன்

Saturday, January 7, 2012

எரிகிறேன் நான்

ன் ஏமாற்றத்தை
கோபம் என்னும் நெருப்பில் எரிக்கிறேன்
நட்பை சருகாக்கி சுடர் விட செய்கிறேன்
தண்டு வடம் எல்லாம் எரிய சாம்பலென ஆகிறேன் 
சாம்பலில் நானே மீண்டும் துளிர்க்கிறேன்
இலை ரேகை எல்லாம் உறவாக நினைக்கிறேன்
அந்த பூ பூக்கும் என நம்பி
மீண்டும் ஏமாந்து எரிகிறேன்!



Sunday, January 1, 2012

ஆரம்பத்தின் ஆரம்பம்!

ன்று மற்றும் ஒரு நாள் தான்,
உதித்த இடம் மாறாமல் உதித்து
மறையும் இடத்தையும் மாற்றாது!
அதே இருபத்தி நான்கு மணி நேரம் தான்,
மணிக்கு அறுபது நிமிடம் மட்டுமே,
மாற்றம் இல்லை!
எல்லா நாளும் இப்படி இருந்த போதும்
ஏதோ ஒரு நாள்
எல்லோருக்கும் நினைவில் நின்றுக்கொண்டிருக்கும்,
நாம் பிறந்த நாள் என்று,
நமக்கு பிடித்தது நம் கைக்கு வந்த நாள் என்று,
நம் வாழ்வை மாற்றியவரை சந்தித்த நாள் என்று,
முதல் சம்பளம் வாங்கிய நாள் என்று,
முதல் முத்தம் தந்து பெற்ற நாள் என்று,
கனவு இல்லம் கைக்கு வந்த நாள் என்று,
கல்யாண நாள் என்று,
மகப்பேறு நாள் என்று,
மனம் மாறி பிரிந்த நாள் என்ற,
எதோ ஒன்று நடந்து அந்த நாள் நம் மனதோடு ஒட்டி இருக்கும்
இன்று நமக்கு பிடித்த ஒன்றை செய்து
இந்த தேதியை நம் மனதோடு ஒட்டி இருக்கச்செய்வோம்!
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!