Sunday, September 17, 2017

புத்தரின் இனவெறி

னிதா – தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதுவும் பரிச்சயமான பெயர். அவளின் மரணத்திற்கு பின் இருக்கும் அரசியலை தாண்டி, நீட்டை தாண்டி நம்மோடு நம் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை நேற்று வரை பங்கிட்டுக் கொண்டிருந்த ஒருத்தி இன்று இல்லையே என்ற ஆதங்கம் தான் இன்று பலரை உலுக்கியது.

அந்த ஆதங்கம் ரோகிந்திய இன மக்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது மிக வருத்தம்.

யார் இவர்கள், இசுலாமியர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் இன்று அண்ட நாடில்லாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நிற்கும் நாடோடியானவர்கள்.

உலகப் போரில் அமெரிக்கா சப்பானில் வீசிய அணுகுண்டின் வீச்சு இன்னமும் இருப்பதை போல இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியுற்ற போது இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி பிரித்து சுதந்திர வேட்க்கையை நீர்த்து போக செய்த சூழ்ச்சி இன்றும் காச்மீரில் நம் மக்களை இழந்து கொண்டிருகிறோம். அது போல தான் மியான்மர் பர்மாவாக இந்தியாவோடு கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த போது பர்மா மக்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்கள் என்று ஒதுக்கி இந்தியர்களுக்கும், ரோகிந்திய இன மக்களுக்கும் அன்றைய முன்னுரிமை வழங்கியது.


அந்த வெறுப்பு சுதந்திரம் அடைந்து இராணுவ ஆட்சியில் 1982ல் அவர்களின் குடியுரிமை பறிக்கம் அளவு வளர்த்திருந்தது. திருமணம், கல்வி, வழிபாட்டு தளம் என அனைத்தும் மறுக்கப்பட்டன.

8/8 /1988ல் எழும்பும் 8888 (8888 uprising) என மாணவர்களால் ஏற்ப்பட்ட புரட்சியில் ஆங் சங் சுகி அடையாளம் காணப்பட்டார். ஒரு அகிம்சைவாதியாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்டார். அந்த புரட்சிக்கு பின்னும் ரோகிந்திய இன மக்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் சுகி இராணுவ ஆட்சியை வெறுத்த இராணுவ அதிகாரிகளை கொண்டு கட்சி ஒன்றை துவங்கி 2015ல் ஆட்சி அமைத்தார். அதன் பின் ரோகிந்திய மக்களின் நிலை இன்னமும் மோசமாது. இதற்க்கு இடையில் 3/9/2014ல் அல் காயிதா அமைப்பு வெளியிட்ட கானொளியில் மியான்மர் முசுலீம்களை நாங்கள் மறக்கவில்லை. அவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் என்றது. அதற்கு அங்கிருந்த முசுலீம் குழுக்கள் எங்கள் தாய்நாட்டிற்கு எந்த அச்சுறுத்தல்களையும் ஏற்க்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இன்று ‘மியான்மருக்கு திரும்புவதை வீட இந்தியாவில் மடிவதே மேல்’ என்ற ஒரு ரோகிந்திய அகதியின் வார்த்தை உணர்த்தும் அவர்கள் நிலையை.

பெளத்த சமயத்தை பிரதானமாக கொண்ட இலங்கையில் நடந்த கொடுமையின் நீட்சியே அதே பௌத்தத்தை கொண்ட மியான்மரில் அரங்கேறி வருகிறது.

துன்பத்துக்கான காரணம் பற்று என்ற புத்தரின் வழிவந்தவர்கள் மியான்மரை தங்கள் நாடு என சொந்தம் கொண்டாடி இவர்களின் குடியிரிமைகளை பறித்து விரட்டும் போது தென்னகத்தில் உள்ளவர்களை கீழ் பிறப்பாகவும், சமணர்களை கழுவேற்றிக் கொன்று தங்கள் சைவ சமயத்தை நிலை நிறுத்திய இந்தியா இவர்களால் தீவிரவாத அச்சுறுத்தல் வரும் என்று தடுப்பதில் எந்த முரணுமில்லை.

அல்லாவின் பெயரை சொன்னதற்காக ஒடுக்கப்பட்ட போது படை திரட்டி போரிட்ட முகமது நபியின் அந்த ஒரு சித்தாந்தத்தை மட்டுமே தவறாக புரிந்து கொண்டு இன்று சில குழுக்கள் அல்லாவின் பெயரை சொல்லி செய்யும் கொடுமைகள் இன்று அனைத்து முசுலிம்களையும் பயங்கரவாதிகளாய் பார்க்க வைக்கிறது.

இங்கு இனம், மொழி, நாடு என்று சொல்லி தினம் பல கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் தனியாக அடையாளப்படுதப்படுவதில்லை. குல்லாவும் தாடியும் வைதிருப்பாதால் இவர்களும் பயங்கரவாதிகள் என சொல்வது நம்மிடையே பகுத்தறிவு குறைவதையே நிருபிக்கிறது.


ஜெர்மனியில் தான் யூதன் என்றால் உடனே விசாரணைக்கு எடுத்து சென்று விடுவர், தான் ஜெர்மானியன் என்றால் தானில்லாது முன்னர் வாழ்த்த மூன்று தலைமுறையினரும் ஜெர்மானியர்கள் தான் என நிருபிக்க வேண்டும் தவறினால் விசாரணை கைதி தான், இது ஹிட்லர் கால நடை முறை. இன்று நாமும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம் ஹிட்லரை மட்டும் மனித மிருகம் என திட்டி தீர்த்து கொண்டு.


Tuesday, August 15, 2017

கும்பகோணத்திலிருந்து கோரக்பூர்

கோரக்பூர் – 70 மழலைகள் இறந்து விட்டனர். இதற்கு இடையில் சுதந்திர கொண்டாட்டம் அவசியமா என்ற கேள்வி எழுவது தவிற்க இயலாதது. கொண்டாட்டம் தேவை இல்லை ஆனால் கேள்வி கேட்க்கும் சுதந்திரம் பெற்றுத்தந்தவர்களை நினைவு கூற இந்த நாள் அவசியம். சரி இந்த கோர சம்பவம் யாருடைய தவறு யார் அலட்சியம், யோகியா, அந்த பிராணவாயு  தருவதற்கு மறுத்த புஷ்பா சேல்ஸ் நிறுவனமா?

இந்த கேள்விகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கும்பகோணம்  ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை நினைவுகொள்வோம். 2004 சூலை 16 அன்று நடந்தது அந்த கோரா விபத்து(!?)

இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் ஆணைக்குழு 2006 ஆம் ஆண்டு சமர்பித்த அறிக்கையின்படி, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அதில் வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஆய்வு செய்யலாம். என்று சொல்லப்பட்டதை இன்று நடைமுறை படுத்துவது எந்த அளவு சாத்தியம். பள்ளிகளில் இடம் கிடைப்பதற்கே தவமாய் கிடக்கும் இவர்கள் ஆய்வு செய்வார்களா? இந்த சிந்தனை ஏன் அந்த நீதி அரசர்களுக்கு வரவில்லை. நமக்கு நம்மை நம் உரிமைகளை காக்க சட்டம் உள்ளது ஆனால் அதை எடுத்து கையாள தான் இங்கு நமக்கு தெம்பு இல்லை.

சரி இதன் பின் பள்ளி விபத்துக்கள் நடக்கவில்லையா, பள்ளி பேருந்துகள் விபதுக்குல்லாகவில்லையா?

மீண்டும் கோரக்பூர் – வியாபாரத்தில் கொடுத்த பொருளுக்கு பணம் சரிவர கட்ட தவறினால் மேற்கொண்டு பொருள் தந்து நிலுவை தொகையை ஏற்றிக்கொண்டு போனால் புஷ்பா சேல்ஸ் எப்படி வியாபாரம் செய்ய முடியும், இது தர்மம் தானே, என இன்று சுதந்திர தின கொண்டாட்டத்தை வெறுப்பவர்களும் அடுத்த 10 வருட விசாரனையில் இப்படி பேசக்கூடும்.


ஒரு மூன்று மாதம் பின்னோக்கி செல்வோம் போர்பஸ் பத்திரிக்கை உலகின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிட்டது, முதல் நாள் ஒரு பெயர் அடுத்த நாள் மீண்டும் பில் கேட்ஸ் தான் என நம் சட்டமன்ற தேர்தல் நிலவரம் போல் மாறியது. அதில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் குழப்பமேதும் இன்றி முதலிடம் அம்பானி தான். ஆனால் அதில் முதல் நூறு பேர் யார், அவர்கள் செய்து வரும் தொழில் என்ன என்று அலசியபோது அதில் முதல் ஐந்து தொழில்கள், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கட்டுமானம் என முதல் இடத்தில ஒய்யாரமாக இருப்பது மருந்தும் அது சார்த்த தொழில்களும் தான்.

இம்பெரியல் பேங்க் (Imperial Bank of India) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) என 1959ல் பொதுவுடைமையாக்கி இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து இதர வங்கிகளை வாரி அனைத்துக் கொண்டது போல, பர்மா ஆயில் பாரத் பெற்றோலியம் என  1976ல் தேசியமயமாகி இன்று வரை பொது மக்களுக்கு சேவை செய்வது போல இந்த பள்ளிகள், மருத்துவம், மருத்துவம் சார்ந்த தொழில்கள் எல்லாம் பொதுவுடைமையாக்க அரசாங்கம் முன் வரலாமே. இதனை விடுத்தது ஒவ்வொரு முறையும் ஆணைக்குழு அமைத்து அரசானை பிறப்பித்து அதை நடைமுறை படுத்த ஒரு குழுவை அமைத்து இப்படி குழு குழுவாக அமைப்பது தவிர்க்கலாமே.

தமிழ் நாட்டில் சாராயக்கடையை அரசாங்கம் அதன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல இந்த மருத்துவத்தையும், கல்வியையும் அரசாங்கம் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இத்தகைய வியாபார நோக்கில் நடக்கும் போக்கு மாறி இத்தகைய நிகழ்வுகளை தடுக்கலாமே. ஆனால் ஆள்பவர்கள் அதை குடும்பத் தொழிலாகவே செய்து வரும்போது இது எப்படி சாத்தியம்.

இந்தகைய சிந்தனை அவர்களுக்கு வராது காரணம் நம் பிரதமரை சுற்றி அமர்ந்திருப்பது வியாபாரிகள், இவர் ஆலோசனை நடத்துவதும் வியாபாரிகளோடு தான். அதனால் தான் இப்படி நாடு போய்கொண்டு இருக்க இன்னும் அரசாங்கத்திடம் இருப்பதையும் தனியாரிடம் ஒப்படைக்கவே நேரம் பார்த்து வருகிறார், சேலம் இரும்பாலை, ஏர்  இந்தியா என போகிறது அரசின் திட்டங்கள்.

எழுபதாம் முதல் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

Saturday, July 8, 2017

வேற்றுமை கொல்

ன்று சமூக வலைதளங்களில் ஒரு படம் பகிரபட்டு வருகிறது. அது அமெரிக்கா இந்தியாவை பார்த்து இங்கு இடஒதுக்கீடு இருக்கும் வரை தங்கள் நாடு வளம்பெருமாம். அதாவது ஒதுக்கீடால் ‘அறிவாளிகள்(!??)’ இங்கு வேலை செய்யாமல் கடல் தாண்டி அங்கு செல்வதாக ஒரு கூற்று பரப்பப்பட்டு வருகிறது. அப்படி பார்த்தல் கல்வியில் இட ஒதுக்கீட்டால் மேல் குடியினர் (forward/general caste) கல்வி கற்க முடியாமல் போகிறது என்ற கூற்று பொய். இது போக எதோ பிற்படுத்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் (SC/ST - Scheduled Castes & Scheduled Tribes) மட்டும் தான் இந்த ஒதுக்கீடு இருப்பது போல் ஒரு தோற்றம் கொண்டு வரப்படுகிறது.


இந்திய அளவில் கல்வியில் 1954ல் கல்வி அமைச்சகம் 20% இட ஒதிக்கீட்டை பிற்படுத்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் (SC/ST) வழங்கியது. அதை தொடர்ந்து 1982ல் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் 7.5% (அ) 15% இவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டது.

இதன்படி இவர்களுக்கு கல்விக் கதவுகள் திறந்தே 60 ஆண்டுகள் தான் ஆகிறது ஆனால் அதற்குள் ஐநூறு ஆண்டுகளாக ஏதோ இவர்கள் பரம்பரையே எளிதாக படித்துக்கொண்டு இருப்பது போல் ஒரு கூற்று காட்ட முயல்கின்றனர். இதனால் முன்னேறிய வகுப்பினர் (forward caste) எல்லாம் பின்தங்கி போய்விட்டது போலும் ஒரு பிம்பம் காட்டப்படுகிறது. அவர்கள் அப்படி பின்தங்கி எங்கும் மலம் அள்ளவோ, செருப்பு தெய்க்கவோ, சவரம் செய்யவோ, தெரு தெருவாக குப்பை பொறுக்கவோ இல்லை. வேதம் சொன்னதற்கு ஒரு பிராயாசித்தம் செய்துவிட்டு கடல் கடந்து மாட்டுக் கறியை விரும்பி உண்ணும் நாடுகளில் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந்தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.”

இது ஆண்டாளின் நான்காவது திருப்பாவை இதில் மழையானது எப்படி பொழிகிறது என்றும் அதை பெருமாளோடு ஒப்பிட்டும் பாடப்படுகிறது. இப்படி பல்வேறு பாடல்களில் இன்று காணும் அறிவியல், மருத்துவம் என எல்லாம் இருக்கிறது.

ஒரு கையில் ஆராத்தி எடுப்பதும் இன்னொரு கையில் மணி அடிப்பது அந்தணர்கள் அன்றாடம் செய்யும் செயல். இப்படி இரு கரங்களில் இரு வேறு செயல்கள் செய்வது மூளையை ஒருங்கிணைந்து செயல்பட உதவும். இன்று மூளையின் செயல் திறன் அதிகரிக்க இப்படி சில வழிமுறைகள் சொல்லித்தறப்படுகிறது.

இவற்றை எல்லாம் ஒரு சமூகத்தினரே வைத்துக்கொண்டு மற்றவர்கள் கற்க விடவில்லை. ரிக் வேதத்தில் உள்ள வர்ண கோட்பாடை காட்டி வர்ணம் மாறுதல் தவறு என்ற பிம்பத்தை உண்டாக்கி, சவரம் செய்பவனை, செருப்பு தெய்பவனை, மலம் அள்ளுபவனையும் அவன் பரம்பரையையும் அப்படியே இருக்க வைத்தனர்.

கல்வி கற்பிப்பவன் அந்தணன், அவன் கற்பித்தது கோவில்களில், அங்கு எல்லோருக்கும் இடம் கிடையாது. ஒரு சில வகுப்பினர் மட்டுமே செல்ல முடியும் அவர்களிடம் கல்வி கற்க்கவும் முடியும்.இந்த நிலை மாற யாரும் எதுவும் கற்க வழி செய்யவே கொண்டுவரப்பட்டது ஒதுக்கீடு. இந்த தொழில் செய்பவர்கள் இன்ன குலம் இன்ன குலத்தோர் எல்லாம் இன்ன சாதி. இந்த சாதியில் பிறந்தவர்கள் அதே தொழில் தான் செய்ய வேண்டும் என்ற முறையில் தாழ்த்தப்பட்டோராக, தீண்டத்தகாதவராக பல சமூகங்கள் ஒதிக்கி வைக்கப்படுவதை தடுக்கவே ஒதுக்கீடு தேவைப்பட்டது.

சுதந்திரம் அடைந்து எழுவது ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் இன்னும் எதற்கு இந்த ஒதுக்கீடு என்ற கூப்பாடு கேட்கத்துவங்கிவிட்டது. படிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் சாதியம் சார்த்த ஒதிக்கீடு தவறு என்ற சத்தம் வலுப்பெறுகிறது. அன்று சாதியின் பெயரால் பல சமூகத்திற்கு கல்வி மறுக்கப்பட்டது. இன்று அந்த சமூகத்திற்கு வழி செய்தால் சாதியம் வழியில் எதுவும் வழங்கப்படக் கூடாது என மீண்டும் தடுக்கப்படுகிறது. உண்மையில் இன்னமும் நீதித்துறையில், மத்திய மாநிலங்களில் அதிகாரம் கொண்ட அரசு துறைகளில் இன்னமும் முன்னேறிய வகுப்பினர் (forward caste) தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ISROவில் இருக்கும் விஞ்ஞானிகளின் பெயர்களே சொல்லும் அவர்கள் எந்த குடி என்று.

மேலும் இப்படி ‘எளிதாக’ இடம் கிடைத்து படிப்பவர்கலால் தரம் குறையத்துவங்கி உள்ளதாக ஒரு பேச்சும் பரவுகிறது. முதலில் எளிதாக எதுவும் வழங்கப்படவில்லை, ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து அதில் படிக்கும் மாணவர்களை மற்ற குடி மாணவர்கள் பார்க்கும் விதம் போதும், நரி குரவர் இனத்தை சேர்ந்த முதல் பட்டதாரியான ஒரு பெண்னின் வார்த்தைகள் சொல்லும் அந்த ‘எளிதான’ என்ற வார்த்தைக்கு பொருள். தரம் குறைய காரணம் யாதெனில்,1948ல் ராணுவதிற்க்காக சீப் (Jeep) வாங்கியதில் நெறிமுறைகளை மீறி செயல் பட்டார் வி.கே. கிருஷ்ணா மேனன் - இந்தியன் பிரிடன் உயர் ஆணையாளர் (மேனன் என்பது நாயர் வகுப்பின் உட்பிரிவு – நாயர் என்பது சத்திரிய குலம் பிராமணர்களாகிய நம்பூதிரிகளுக்கு அடுத்தது). இவர் எந்த ‘எளிய’ முறையில் இடம் கிடைத்து படித்தவர் அல்லவே. இவர் மீது நடந்த வழக்கில் அரசு நாட்டம் காட்டாததால் தள்ளுபடி செய்து இவரை விடுவித்தது நீதி மன்றம் – குற்றமற்றவர் என்று விடுதலை ஆகவில்லை. அவரே நேருவின் மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை மந்திரியானார். தரம் குறைய காரணம் இத்தகைய நெறிமுறை தவறுதலும், அவரே மீண்டும் ஆட்சி அதிகாரம் பெறுதலும் மட்டுமே அன்றி ஒதுக்கீடு இல்லை.


மருத்துவம் படித்த அந்த மருத்துவ தொழில் செய்பவர் ஸ்டெதாஸ்கோப் (stethoscope) அணிவர் பெயருக்கு முன் Dr எனவும் இருக்கும். அது அந்த தொழிலுக்கு அவசியம். இறை சேவை செய்தும், கற்பித்தும் வந்தவன் அந்தணன் என்னும் போது அவன் பூணூல் அணிவது ஒரு முறையாக இருந்தது ஆனால் இன்று  அந்த தொழில், அந்த வர்ணம் சார்ந்த எதையும் செய்யாது வியாபாரம், கணக்கு, அறிவியல், நடிப்பு, நாடகம் சார்ந்த தொழில் செய்யும் போதும் இன்னமும் இன்ன வகுப்பு இப்படி தான் நூல் அணிய வேண்டும், திருநாமம், பட்டை, குடுமி என திரிவதும், சத்திரியன் தொழில் நாடாள்வது போர் புரிவது, தேவர், கவுண்டர், நாயர் யாரும் ராணுவத்தில் சேராது பெயரின் பின்னால் மட்டும் சேர்பது என்ன மாறினாலும் நான் உயர் குடி என்றும் வர்ணம் பிறப்பினால் மட்டுமே வரும் வளர்போ, கல்வியோ தராது என்பதை காட்ட தானே தவிற வேறில்லை.


Monday, May 1, 2017

ஒதுக்குப்புறம்

ன் பள்ளி பருவத்தில் எங்கள் ஊரில் இருந்தது ஐந்து திரையரங்குகள். அதில் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்திருந்த ஒன்றில் தான் ரஜினி படம் வெளியாகும். அடுத்த இரண்டில் வேறு புது படங்கள் வெளியாகும். மற்ற இரண்டில் எப்போதும் பழைய படமும் ‘A’ படம் மட்டுமே வெளியாகும்.


அந்த ‘A’ பட சுவரொட்டிகள் ஒட்டப்படிருக்கும் பக்கம் பார்ப்பதே ஏதோ பெரியா குற்றம் என்பது போலவே கடந்து போவேன். என் அப்பா Speed , MIB போன்ற படங்களுக்கு என்னை அழைத்து போவார் அப்படி தான் ஒரு நாள் Titanic போவோம் என்றார். பின்னர் பள்ளி நண்பர்கள் மூலம் அந்த படத்தில் கதாநாயகியின் நிர்வாண காட்சி மட்டுமே சுமார் பதினைந்து நிமிடங்கள் வருவதாக அறிந்து என் அப்பாவின் அறியாமையை கடிந்து கொண்ட காலமும் உண்டு.

ஆனால் இன்று அதை வீட ‘நல்ல’ படங்கள் கைகளில் ஓடுகிறது. ‘எனக்கு போன் வாங்கி தரலைனா அடுத்த எக்சாம்ல பெயில் ஆகிடுவேன்’ என மிரட்டி கைபேசி வாங்குகின்றனர் பள்ளி மாணவர்கள்.

அப்பாவுக்கு புகை பழக்கம் இருந்தது ஆனால் அந்த சிகரெட்டே பாக்கெடை எப்போதும் என் கைக்கு எட்டதா இடத்தில் தான் வைப்பார். வெளியே சென்று வீடு திரும்பியதும் சட்டை பையிலிருந்து எடுத்து எட்டாத இடத்தில் வைத்து விடுவார். அதுவும் நான் இன்று புகைக்காததர்க்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதே போல் அன்று மது கடைகள் ஊருக்கு அப்பால் இறைச்சி வெட்டும் இடங்களுக்கு அருகில் இருந்தது ஆனால் இன்று ஊர் எல்லையிலேயே வரவேற்கிறது முதல் கடை. தெருவுக்கு ஒன்றாய் கடை விரித்து விட்டு ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என திரைப்படத்தில் மட்டும் கட்டாயமாக எழுத்து போடுவது என்ன மக்கள் நலனோ?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரை காட்டிலும் இன்று பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்க மேல் சொன்ன இரண்டும் முக்கிய காரணங்களாக கருதுகிறேன். யாரும் எந்த நேரத்திலும் எதுவும் பார்த்திட உதவும் கை பேசி, அதில் வக்கிர படங்களை பார்க்கும் ஒருவர் கிடைக்கும் யாரிடமும் அந்த இச்சைய தனிக்க முற்படுவதே இந்தகைய குற்றங்கள் அதிகரிக்க காரணம். சென்னையில் முகலிவாக்கத்தில் நடந்த ஒரு சிறுமியும் படுகொலை ஒரு உதாரணம். பெரும்பான்மையாக இத்தகைய குற்றத்தில் பிடிபடுவோர் யாரும் இதே குற்ற பின்னணியோ அல்லது வேறு எந்த தவறுக்கான பின்புலம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். இப்படி வக்கிர படங்களை பார்த்து வெறி ஏறினவர்கள் தனிமையில் பார்க்கும் பெண்களிடத்திலோ, குழந்தைகள் இடத்திலோ தங்கள் இச்சையை தீர்க்க பார்ப்பது தான் இத்தகைய குற்றத்திற்கான காரணம்.

இது மட்டுமின்றி இப்படியான தவறுகளின் போது அரசியல் தலைவர்கள் பெண்கள் உடுத்தும் உடைகள் மீதே அந்த குற்றத்தை சுமத்தும் போது அடுத்து தவறு செய்வோருக்கு அது ஒரு நியாயம் கற்பித்துவிடுகிறது.

இதில் இன்னமும் எண்ணை விடுவது போல் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மது வந்து சேரும் சேவையை துவங்கி இருக்கின்றனர். மது கடைக்கு செல்ல கூச்சப்படுவோருக்கும் விடும் அழைப்பே இது. மது அருந்தியவர்கள் வெட்கமும் மானமும் மறந்து குருட்டு தைரியத்தில் கத்துவது போல் இனி குற்றங்களும் அதிகரிக்கும்.

இதில் இன்னுமொரு உளவியல் சார்த்த ஒரு அணுகுமுறை குறைபாடு உள்ளது. அது ஆண்களுக்கான அறிவுரையில்லாது போனது. பெண் வயதுக்கு வந்தவுடன் அம்மா, சித்தி, அத்தை, பக்கத்து வீட்டு பெரியம்மா என அனைவரும் பல அறிவுரைகள் சொல்லியே வளர்க்கின்றனர். ஆனால் ஒரு ஆண் வயதுக்கு வந்ததே அவனுக்கு மட்டுமே தெரிகிறது. உணர்சிகளை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். இனி எப்படியான மனோரீதியான மாற்றங்கள் நிகழும் அதற்க்கு எப்போது எப்படி நடந்து கொள்வது என்று சொல்லும் பழக்கம் எங்கேயோ தொலைத்து விட்டோம்.

விரதம் அனுசரிப்பது, அதிகாலையில் குளிர் நீரில் குளிப்பது, சில காலங்களில் சில உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது போன்றவற்றை மொத்தமும் ஒதுக்கி ஆத்திகம் பேசியதும் சற்று தடம் மாற்றி விட்டது. உண்மையில் இதகையே நடைமுறையும் கூட ஒரு வகுப்பினருக்கு மட்டுமே சார்த்து சாதி பேதம் பார்த்தே வழக்கமாக வைத்து இன்னொரு பிரிவினரை குற்றம் பரம்பரையாகவே இருக்க வைத்திருக்க வேண்டும்.


இப்படி உளவியல் ரீதியாக அணுக வேண்டியவற்றை வெறும் சட்டம் கொண்டு மட்டும் கொரூர தண்டனைகள் மூலம் தீர்வு காண முடியாது.


Saturday, January 14, 2017

தடைகளை தகர்க்க ..

தீபாவளி நேரம் இரவு பத்து மணிக்கு ஊருக்கு கிளம்பினேன், ஆட்டோ எதுவும் கிடைக்க வில்லை. தீபாவளி கூட்டம் இருக்கும் திரும்ப முடியாது என மறுத்தனர். சில நிமிட அலைச்சலுக்கு பின் ஒரு வழியாக கிட்டியது. பத்து வாரத்துக்கு பின் இந்த வழியாக வருவதாக சொன்னார் ஓட்டுநர். இதற்கும் அவர் சேர் ஆட்டோ ஓட்டுபவர், ‘ரெண்டு பக்கமும் திறந்து வெச்சிருக்கானுங்க சார். காலைல இருந்து சம்பாதிக்கறது எதுவும் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியல’ என்றார். நல்லது பத்து மணிக்கு மேல் தான் அவரை அழைத்து வந்திருக்கிறேன் நிம்மதியாக ஊருக்கு போய் சேர்ந்தேன்.

கள்ளுண்ணாமை என சொல்லி கள் இரக்குதல் தடை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கள்ளச்சாராயம் வீதிக்கு வந்தது, அதனால் உயிர் பலிகள் அதிகரித்தது. இதை சரி செய்ய என மதுபான கடைகள் அரசாங்க அனுமதியோடு வந்து இன்று அதை அரசே பொறுப்பேற்று தெருவுக்கு ஒன்றாய் நடத்தியும் வருகிறது.

கள்ளு, கள்ள சாராயம், மேற்க்கத்திய மது பானங்கள் எல்லாமுமே போதை தரும். ஆனால் அது உடலில் செயல்படும் முறை வெவ்வேறு மாதிரி இருக்கும்.

கள், தென்னை மற்றும் பனை என மரங்களில் இருந்து இரக்கப்படுகிறது. உடல் சூட்டை நீக்கக் கூடியது. மேற்க்கத்திய மது பானங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும். அவர்கள் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு அது உகந்ததாக அவர்கள் பாரம்பரியத்தோடு விழாக்களில், திருமணங்களில் கூட இருக்கும்.இப்படி சூட்டை கிளப்பும் மதுவை நம் ஊர் தட்பவெட்ப நிலைக்கு குடிக்க உடல் கெட்டுவிடுகிறது.

கள்ளைத் தொடர்ந்து சேவ சண்டை தடை செய்யப்பட்டது. கோழி வளர்த்தால் முட்டை காசு கொடுக்கும், கோழியும் ஒரு வயதில் கறியாகி காசாகும். சேவல் சண்டைக்கு என வளர்க்கப்பட்டு, அது கோழிகளோடு கூடி நாட்டு கோழி முட்டையிட்டு வந்தது. சேவ சண்டை முற்றிலும் தடை செய்யப்பட நாளடைவில் நாம்  ப்ராயிளர் கோழிக்கு மாறி விட்டோம். வியாதிகளும் பெற்று விட்டோம். நாட்டு கோழி வளர்த்தவர்கள் நிலை மறந்து விட்டோம்.

இன்று சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. நாளையே காளைகள் அடி மாடுகளாகாது. பசுவுக்கு கருவூட்ட சினைகள் விற்கும் நிறுவனங்கள் பெருகும். அடுத்த தலைமுறை இனி காளை எதற்கு வளர்க்க வேண்டும் கருவூட்ட சினைகள் ஊசியில் ஏற்றப்படும் போது என கணக்கிட்டு காளைகள் வளர்ப்பு நிறுத்தப்படும். நாட்டு மாடுகள் வெளி நாட்டு காளையின் கன்றுகளை ஈன்று எடுக்கும். இப்படி நாட்டு மாடுகள் மெல்ல மெல்ல வெளி நாட்டு மாடுகளாக மாறிவிடும்.

வெளி நாட்டு உணவு என்பது தீங்கு இல்லை, ஆனால் உடல் உறுப்புகள் நாம் வாழும் இடத்திற்கு ஏற்ப அதன் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார் போல் மாறுபட்டிருக்கும். எனவே நாம் வாழும் மண்ணில் ஏறத்தாள 400 மையில் சுற்று வட்டாரத்தில் விளையும் உணவுகள் நம் உடலுக்கு ஏற்றதாக இருக்கும். மேற்க்கத்திய உணவுகள் தீங்கானவை இல்லை அது நம் உடலுக்கு ஒவ்வாதவை.

எனவே கள்ளை முற்றிலும் தடை செய்யாது அரசே கள்ளுக்கடைகளை இப்போது மேற்கத்திய மது பானங்கள் விற்பது போல் நடத்தி இருக்கலாம், பனை மரங்கள் மிஞ்சி இருக்கும். சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் என கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி அதிகரித்திருக்கும். 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது.

இன்று இவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளி நாம் அந்நிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறோம் என்பது நிதர்சனம். அந்நிய முதலீடு நாட்டின் வளர்ச்சி இல்லை வீழ்ச்சி தான். கிழக்கிந்திய நிறுவனம் பதினேழாம் நூற்றாண்டில் முதலீடு செய்ததின் பலன் சும்மார் 200 ஆண்டுகள் அடிமை இந்தியா. இது இன்னும்மொரு படை எடுப்பே வளர்ச்சி இல்லை.

பாரம்பரியம் முற்றிலும் தடை செய்யப்படும் போது அதன் விளைவுகள் கட்டாய மாற்றமாக இருக்கும். எந்த மாற்றம் நிகழும் போதும் அழிவுகள் அதிகம் இருக்கும். அதில் மிஞ்சியவையே மாற்றத்திற்கு உட்பட்டு வளரத் துவங்கும். இப்போது தேவை இல்லாத மாற்றத்தினால் அழிவுக்கு கட்டாயமாக தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இத்தகைய நிலையை தடுக்க, கள்ளுக்கடை, சல்லிக்கட்டு போன்றவை தகுந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு தொடரப் படவேண்டும். அதை விடுத்தது முற்றிலும் தடை என்பது அறிவுள்ளவன் செய்யும் செயல் இல்லை.


Sunday, January 8, 2017

புத்தரின் மனையாள்

லகில் இனம், மதம் என எல்லாவற்றிக்கும் முன்னரே தீண்டாமையைச் சந்தித்தவள் இவள். மாதவிடாய் காலத்தில் வரும் இரத்தம் தீட்டு என ஒதிக்கி வைக்கப்பட்டாள். அந்த நாட்களில் தொடுவதற்கே ஏற்றவளல்ல என புனித சடங்குகளில் இருந்த ஒதுக்கியே வைக்கப்பட்டிருக்கிறாள்.

தங்கள் பேரரசில் சூரியன் மறைவதே இல்லை என்று பெருமை பட்டுக்கொண்ட, இன்று ஒரு பெண் அரசியை கொண்ட இங்கிலாத்தில் 1918ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. முதல் பொதுத் தேர்தல் 1708ல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் என ஒடுக்கப்படவர்களுக்கு வாக்குரிமை 1870ல் வழங்கப்பட்ட போது கூட பெண்களுக்கு இல்லை, அவள் 1920ல் தான் பெற்றாள்.

இவள் இன்ன உடை தான் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள், இவள் அங்கம் தெரிந்தால் அவன் உணர்சிகள் தூண்டப்படும் என்று ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறதே தவிற பொது சித்தனை இல்லை. முறுக்கிய மீசை, பரந்த மார்பு என திரியும் ஆணைக்கண்டு அவள் உணர்சிகள் பொங்கக் கூடும் என்று ஆணை போர்த்திக்கொள்ள சொல்லும் மதங்கள் இங்கு இல்லை. உண்மையில் அவள் ஒரு மணி நேரத்தில் பல முறை உச்சம் அடைய முடியும், அப்படி பார்த்தல் அவள் உணர்சிகள் தூண்டப்பட்டால் பல கொலைகள் அன்றாடம் நடக்கும்.

கட்டிய மனைவியை விட்டு நாட்டியக்காரியிடம் சென்றவனை தலைவனாகக் கொண்ட சிலப்பதிகாரத்தை ஏற்றுக்கொள்பவர்கள் கூட மகாபாரதத்தை விமர்சிக்கும் போது திருமணதிற்கு மும்பு பிள்ளை பெற்றவள், ஐவரை திருமணம் செய்யும் பெண் நாயகியாக சொல்லும் கீழ்த்தரமான காவியம் என்று ஒரு பெண்ணின் நெறியை தொட்டே இடித்துரைப்பர்.

Prince Siddhattha & Princess Yasodhara's marriage
இப்படியாக அவள் கட்டுப்பாடுகளுக்குள் தான் இன்றும் தினிக்கப்பட்டிருக்கிறாள். பாற்கடலில் ஆதிசேசன் மேல் விஷ்ணுவின் திருவடிகளை பற்றியவாறு தான் லட்சுமி இருக்கிறாள். இங்கு குழந்தை இடை கூடுதலாக இருந்ததால் உறுப்பை கீறி அவள் பிரசவிக்கிறாள், பின்னர் எட்டு தையல்கள் போடப்பட்டு பிழைத்து வருகிறாள். அதை உணர்ந்த அவள் பெற்றோர் அவளை தாங்குகிறார்கள் அதற்க்கு பேரன் பிறந்ததில் மகிழ்ச்சி இல்லையோ உன்னை மட்டுமே தாங்குகிறார்கள் என்று உரும்பும் கணவர்களோடும் அவள் வாழ்கிறாள்.

நான் பார்த்தவரையில் என் தந்தை எந்த வீட்டு வேலையும் செய்தது இல்லை. என் அன்னை வீடிற்கு எதுவும் சம்பாதித்ததும் இல்லை. இப்போது காதலித்து மணமுடித்த கணவன் தான் சம்பாதிப்பதில் பாதி சம்பாத்தியமே பெற்றாலும் அகம்பாவம் இல்லாது இல்லறம் நடத்துகிறாள். அவள் காலையில் தூங்கும் கணவனுக்கு, அவன் பெற்றோருக்கு, மத்தியம் அவளுக்கும் சமைத்து கட்டி எடுத்துக்கொண்டு இனி ராத்திரி திரும்பி என்ன சமைக்க என்ற சிந்தனையோடே வேலைக்கும் ஓடி ஒரு பதவி உயர்வு பெற்றுவிட்டால் அவள் பல முறை தீக்குளிக்க வேண்டி இருக்கும். அவள் வேலை செய்யும் இடத்தில் அத்துனை ராவணன்கள், துட்சாதனங்கள், துரியோதனன்கள் உண்டு.

வேலைக்கு போகும் அவளை ஏன் வீட்டு வேலை வாங்குகிறீர்கள் என்று கேட்டால் சட்டென பெருமிதமாய் வரும் பதில் ‘என்ன சொன்னாலும் நானே செய்யறேன்றா’. இதையே தன் மகன் சொல்லி சரி என கால் நீட்டி அமர்ந்து கிடக்கும் தாயை நான் கண்டதில்லை. ஆனால் அதே வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருந்தால் அவள் பள்ளிப் பருவம் தொட்டே துவைக்கவில்லை என்றாலும் துணிகளை மடிக்க கற்றுக்கொடுக்கப் பட்டிருப்பாள். சமைக்கவில்லை என்றாலும் பாத்திரம் தேய்க்க கற்றுக்கொடுக்கப் பட்டிருப்பாள். இவன் தான் உண்ட தட்டை கூட கழுவாமல் வளர்க்கப்படிருப்பான்.

இனி அவளுக்கு சமமாக இவன் இருக்க பெற்றோர்கள் இனி இவனுக்கு வீட்டு வேலை செய்ய கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். அவள் இன்று சம்பாதிக்கவும் செய்கிறாள் இவனுக்கு மேலாகவே.


இப்படி மாற வேண்டியது அவளை சுற்றி இருப்பவர்கள் தான் அன்றி அவளில்லை. அவள் விருப்பம் போல் உடை அணிந்து, விம்பிய நேரத்தில் விரும்பிய இடத்திற்கு செல்ல பாதுகாப்பு இல்லை என்றால் அது அந்த நாட்டிற்க்கு கேவலமே அன்றி அவளின் விருப்பங்களின் பிழை இல்லை. இதை உணராதோர் ஆளும் நாட்டில் பெண்ணியம் ஏட்டுச் சுரைக்காயாக தான் இருக்கும். இவள் தான் பாதிக்கப்பட்டும் குற்றத்திற்கு காரணமாக பழியையும் சுமக்கிறாள். இது கேவலமான நாடு தான்.

Saturday, November 12, 2016

நரிகளுக்கான பொறி


ந்த புது ரூபாய் மாற்றமானது அம்பானி, மல்லையாவை குறிவைத்து அல்ல அவர்கள் பணம் இந்தியாவில் அவர்கள் படுக்கையின் கீழ், கழிவறையில் பதுக்கி வைக்கப்படவில்லை. அது வெளிநாடுகளிலும், நம் நாட்டிலும் என்றோ வெள்ளை பணமாக உலா வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலில் நிர்ப்பது மொரிசியச், அமெரிக்க டாலர் மதிப்பில் 900 கோடி அவர்கள் இந்தியாவில் 2015ல் மட்டும் செய்த முதலீடு. அதாவது 2040 கிமீ மொத்த பரப்பளவு கொண்ட சிறு தீவு 3,287,263 கிமீ பரப்பளவு கொண்ட இந்தியாவில் செய்துள்ள தொகை இந்திய மதிப்பில் ரூ58,500 கோடி. அதற்க்கு காரணம் DTAA (Double Taxation Avoidance Agreement ) அதாவது அங்கிருந்து செய்யப்படும் முதலீட்டுக்கோ, அதனால் பெறும் லாபதிற்க்கோ இந்திய அரசாங்கம் எந்த ஒரு வரியையும் விதிக்காது. மேலும் ஏதொரு மொரிசியசின் குடிமகன் இந்திய நிறுவனத்தை கையகப்படுதினாலும் வரி இல்லை என்ற ஒப்பந்தம் இரு நாட்டிற்க்கு இடைய உள்ளது. இங்கு மறைக்கப்படு வரி செலுத்தாமல் அந்த தீவுக்கு கருப்பாக சென்று வரி ஏதும் இல்லாமல் இங்கேயே வந்து மீண்டும் வரி இல்லாமல் குட்டியும் போடுகிறது (ஆனால் சமீபத்தில் இந்த ஒப்பந்தத்திலும் சில மாற்றங்கள் செய்யாப்பட்டு உள்ளது).
  

மொரிசியசு - Mauritius

இது பெரும் முதலைகள் போகும் வழி. சிறு நரிகளுக்கான பொறி தான் இந்த 500, 1000 மாற்றம். நேற்று என் வீட்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்றிருந்தேன், அந்த கடைக்கு பால் விநியோகம் செய்யும் நபரிடம் வாக்கு வாதத்தில் இருந்தார் கடைக்காரர். இவர் இருக்கும் பழைய ஆயரம் ருபாய் தாளை பெற்று கணக்கை முடிக்கச் சொல்கிறார். அதை வாங்க மறுத்து அந்த நபர் சொன்னது ‘உங்க கிட்ட வாங்கி அவங்க பேங்ல போட்ட, டாக்ஸ் அவர் கட்டனும். இந்த ஒரு தடவ வாங்கிக்க சொல்றார். அடுத்த வாரம் புது நோட்டுன்னா தான்’. யாரும் தான் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில் போடுவது இல்லை. வங்கியில் செலுத்தினால் வருமானத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். அந்த வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும்.

இப்படி அடகு கடைக்காரர், மள்ளிகை கடைக்காரர் என தினம் தினம் போகும் கடைக்காரர்கள் வீட்டில் தூங்குகிறது இந்த கருப்பு பணம். வக்கீல்கள், வைத்தியர்கள் என நீளும் இந்த பட்டியல். இவர்கள் வீடுகளில் அவ்வளவா இருந்து விடும் என்ற கேள்விக்கு நீங்கள் உங்கள் தெருவை தாண்டி, தாலுக்கவை, நகரத்தை, மாவட்டத்தை, மாநிலத்தை தாண்டி மொத்தம் இருக்கும் இந்திய மாநிலங்களோடு இவர்களின் எண்ணிக்கையை பெருக்கிப் பார்த்தல் தெரியும் இந்த மாற்றம் அவசியமா இல்லையா என்று. பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களில் (MNC) வேலை செய்யும் நாம் வீட்டு வாடகை (rent receipt) என்று பொய்யாக போட்டு வரி எய்ப்பு செய்வது போல இங்கு வணிகம் செய்வோர் பலர் சேர்த்து வைத்திருக்கும் தொகைகளை வெளியே எடுக்கும் முயற்சி தான் இது.

இலவசமாக (திமுக)/ விலை இல்லா (அதிமுக) தரும் டிவி, மிக்சி, பேன்க்கு இவர்கள் எல்லா கடைகளிலும் இந்த swipe machine கொடுத்திட்டு, அதை பயன்படுத்துவதற்க்கான வரி/கட்டணத்தை அரசு ஏற்றுக்கொண்டு இதன் பயன்பாட்டை கட்டாயம் ஆகினால் போதும். இந்த நிலை மாற.

ங்கியிலும், ATM மையங்களிலும் கூட்டம் அலைமோதக் காரணம் நமக்கு யோசிக்கும் திறம் இல்லை என்பதே. ATM கார்டு வைத்திருப்பவர்கள் தினசரி பொருட்களை பல்பொருள் அங்காடியில் (departmental store) வாங்கலாம். அங்கேயே, கருவேப்பிள்ளை கொத்தமல்லி, பச்சை மிளகாய் உட்பட சகலமும் கிடைக்கிறது. மருந்து வாங்க பல கடைகளில் ATM கார்டுகள் பயன்படுத்தலாம் (MedPlus, Apollo). ஒரு வாரம் மட்டுமே இந்த நிலைமை என்பது உணர்ந்தால் பதட்டம் இல்லாமல் இந்த நாட்களை கடக்கலாம். ராகுல் காந்தி ரூ.4000 வாங்க வங்கி வாசலில் நிர்ப்பது எவ்வளவு அபத்தமோ அப்படி தான் debit/credit card வைத்திருப்போர் நிற்பதும்.

நம் பதற்றத்திலும் இந்த மாற்றத்திலும் மாட்டித் தவிப்பது என்னவோ அன்றாடம் கூலி வேலை செய்வோர் தான். கூலி வேலை செய்து சேர்த்த ஆயிரங்கள் செல்லாது என சொன்ன பதற்றத்தை பயன்படுத்தி பலர் ஆயிரம் தாளுக்கு 800 ரூபாய் எனவும், 500ரூபாய் தாளுக்கு 400 ரூபாய் எனவும் ஏமாற்றப்படுகின்றனர். ஏமாற்றுபவர்கள் அம்பானியோ, மல்லையவோ இல்லை அதே தெருவில் ஆட்டோ ஓட்டுபவர், கடை வைத்திருப்பவர்கள் தான். மாற்றம் நம்மில் இருந்து துவங்க வேண்டும்.

நம் பதற்றத்தையும் இந்த அன்றாடம் காட்சிகள் படும் பயத்தையும் தான் இப்போது எதிர் கட்சிகளும், மாநில கட்சிகளும் பேசி பேசி இந்த மாற்றத்தால் பயன் இல்லை என்று கூப்பாடு போடுகிறது. அடுத்த முறையேனும் இவர்கள் வெற்றி பெற வழி தேடுகிறார்களே ஒழிய வேறு கூற்று இல்லை இவர்கள் பேச்சில்.