Showing posts with label உண்மைச் சம்பவம். Show all posts
Showing posts with label உண்மைச் சம்பவம். Show all posts

Sunday, January 6, 2019

அமெரிக்க கனவு


முப்பது வயதை கடந்த எல்லோரும் எதிர்க்கொள்ளும் பொதுவான கேள்வி ‘எப்போ தான் கல்யாண சாப்பாடு போடுவே?’ என்பது போன்று இப்போது வேலை கிடைத்தவுடன் எதிர்கொள்ளும் கேள்வி ‘வெளி நாடு போக ஏதும் வாய்ப்பு இருக்குமா?’ பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் வெளி நாடு என்றாலே அமெரிக்கா தான் என இருந்தது இன்னமும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த கனவு உண்டு.
அப்படி எந்த கனவும் இல்லாத எனக்கு அது நினைவானது. அதற்க்கான முதல் வேலை, விசா

விசா :
‘சாமி நான் எல்லா உங்க வீட்டு உள்ள  வர கூடாதுங்க’ என ஒரு சமூகத்தினரையே சொல்ல வைத்த சாதிய கொடுமை போன்றது இந்த அமெரிக்க விசா வாங்குவது. நடை பாதை நடப்பதற்கே என்று சொல்லி வியாபாரிகளை, அங்கேயே குடும்பம் நடத்தும் நாடோடிகளை விரட்டும் அரசாங்காம் அண்ணா மேம்பாலம் அருகில் செம்மொழி பூங்கா எதிர் புறம் இருக்கும் நடை பாதையில் எவரையுமே நடக்க விடாது. அங்கே தான் இந்த விசா வாங்க வரிசையில் நிற்க வேண்டும். கைபேசி, earphone, headphone, கார் சாவி (அதில் ஏதும் ஒலி, ஒளி வருமானால்) என எதுவும் உள்ளே அனுமதி கிடையாது. மற்றதை எல்லாம் காரில் போட்டுவிட்டு உள்ளே போகலாம், அந்த கார் சாவி? அதை 500 ரூபாய்க்கு பாதுகாக்கும் ஒரு இடமும் அங்கு உண்டு, அது பஞ்சர் ஒட்டும் கடை. அங்கே இதை எல்லாம் குடுத்துவிட்டு தான் உள்ளே போக வேண்டும்.

கை கடிகாரம் கூட கையில் கட்டி இருக்க கூடாது. இப்படி மொத்தத்தையும் கொடுத்துவிட்டு நடை பாதையில் வரிசையில் நின்றால் உள்ளே செல்ல ஒரு மணி நேரம் ஆகும். அந்த வருசையில் எனக்கு முன் ஒரு தம்பதி நின்றிருந்தார்கள். அரை அரை அடி நகர்ந்து தூதரகம் உள்ளே போனால் அங்கே உட்கார அனுமதி இல்லை. கோவில்களில் பண்டிகையின் போது வளைந்து வளைந்து மூங்கில் கட்டிவிட்டு மொத்த கூட்டத்தையும் வரிசையில் நிற்க வைப்பது போன்று நிற்க வைத்தனர். நீண்ட நேரம் நின்ற களைப்பில் ஓரமாய் இருந்த திண்டில் அமர்தார் எனக்கு முன்னால் இருந்த பெண்மணி, உடனே ‘madam you should not sit please stand in the line’ என பின்னால் இருந்து சத்தம் கேட்டது. சட்டென ‘so do we need to kneel down in front of the interviewer?’ என கேட்க வாய் வந்தது ஆனால் இந்த விசா எனக்கு கிடைக்க வில்லை என்றால் ஒன்ருமிலை இதனால் அவர்களுக்கும் வாய்ப்பு போனால் இன்னொரு முறை சில ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டும்.. அடக்கிக்கொண்டேன்.

சர்வதேச முனையம்:
விமானத்தில் கழுவ தண்ணீர் தர மாட்டார்களே எப்படியும் 23 மணி நேர பயணம் இதையும்  அடக்க வேண்டுமோ என்ற சிந்தையோடே விமான நிலையம் வந்தடைந்தேன். என்னோடு இன்னும் மூன்று பேர் உடன் வேலை பார்ப்பவர்கள் அவர்களுக்கு அமெரிக்காவில் சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற சிந்தனை.

உள்ளே சென்றவுடன் போர்டிங் பாஸ் வாங்க வேண்டும் அதிலும் நம் ஊர் கோவில்களில் 500 ருபாய் டிக்கெட் வாங்கினால் சாமி அருகில் அமர்ந்து தரிசனமும் மாலையும் தர்ம தரிசனம் போகும் போது அப்படியே எட்டி கும்பிடு போட்டுவிட்டு போக வேண்டுமே அதே முறை தான், பிசினஸ் இக்ளாஸ், எகானமி இக்ளாஸ் தனி தனி வரிசை. பிசினஸ் இக்ளாஸ் மக்களுக்கு விமானம் புறப்படும் வரை காத்திருக்க தனி அறை, சாப்பாடு, சரக்கு என சகல வசதிகளும் உண்டு. விமானம் வந்தவுடன் முதலில் பிசினஸ் இக்ளாஸ் மக்கள் தான் ஏற வேண்டும் அடுத்து தான் எகானமி இக்ளாஸ்.

ஆகாயத்தில் பூகம்பம்:
எகானமி இக்ளாசில் நான்கு பேர் அமரும் இடத்தில் பிசினஸ் இக்ளாசில் நான் ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தேன். இப்பொது எல்லாம் விமான பயணம் அறிய ஒரு செயல் இல்லை தான் ஆனால் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து செல்வது போல் இல்லை இந்த பிசினஸ் இக்ளாஸ். அதிகமாக படத்தில் கூட பார்த்திராத ஆடம்பரம் (YouTube’ல் பிசினஸ் இக்ளாஸ் விமான பயணத்தை பற்றியும் விமர்சனம் உண்டு தெரியாதவர்கள் தேடி பார்க்கவும்)

https://www.youtube.com/watch?v=_yhZDsctiZg
முதலில் தோஹா வரை ஒரு விமானம், ஐந்து ஆறு மணி நேர பயணம். அந்த பிசினஸ் இக்ளாசில் அருகில் இருப்பவர் முகம் பார்க்க முடியாத அளவுக்கு மறைப்பதற்கு வசதி உண்டு. ஆனால் அந்த வசதி எதற்கு என இதுவரை விளங்கவில்லை. இருக்கையை சாய்ப்பதற்கு, நகர்த்துவதற்கு, நீடுவதற்கு தனி தனி பொத்தான்கள். அடுத்து பதினாறு மணி நேர பயணம் அதில் தனி அறை போல இருந்தது. ஏறி அமர்ந்தவுடன் வெது வெதுப்பான நீரில் நினந்த துண்டு முகம் துடைக்க, குடிக்க பானம், பாதாம், பிஸ்த்த என ஏக போக கவனிப்பு. உறங்கும் போது அனிய தனி உடை, செருப்பு, சிறு பெட்டியில் முகத்திற்கு பூச ஒரு க்ரீம், ஸ்ப்ரே, கை கால்களுக்கு என தனி தனி க்ரீம்கள், கை வைக்க இடம், கால்கள் நீட்ட இடம் என ஏக போக வசதிகள் தான் ஆனால் உணவு மட்டும் சகிக்காது, பொங்கல் வடைக்கு சோயா சாசும், ஆலிவ் ஆயிலும் வேண்டுமா என்ன விசாரிக்கும் அளவு தான் அங்கு வேலை செய்பவர்களின் இந்திய உணவு பற்றிய அறிவு.

பிசினஸ் இக்ளசில் எகானமியை வீட சரி பாதிக்கும் குறைவான பயணிகளே ஆனால் இவர்களுக்கு நான்கு கழிவறைகள் அங்கு இரண்டு தான். ஒரே ஒற்றுமை எதிலும் கழுவ தண்ணீர் கிடையாது.

விமானம் புறப்பாடு பற்றி சொல்லி முடித்ததும் ஆப்ரிக்க மக்களை படிக்க வைக்க உதவுமாறு வேறு கேட்டார்கள். இவர்கள் தந்த இக்ரீம்கள், அதை போட்டு வைத்திருந்த டப்பா, சட்டை, பேன்ட், செருப்பு என மொத்தமும் இருபது இருபத்தி ஐந்து டாலர் இருக்கும். இருபத்தி மூன்று நேர பயணத்திற்கு போர்வையும் தலையனையும் தான் எடுத்து வர முடியாது மத்ததெல்லாம் அவ்வுளவு அவசியமா? அதை மிச்ச பிடித்தாலே போதுமே.

ஜார்ஜ் புஷ் இன்டர்கான்டிநென்டல் ஏர்போர்ட்
‘என்ன சார் இது நம்ம ஊர் ஏர்போர்டே பரவல போலயே. தோஹா ஏர்போர்ட் எப்படி இருந்துது’

‘எதுக்கு இங்கே வர்றே, எவ்ளோ நாள் இருப்பேனு கேட்டுட்டு தான் உள்ள விடறான் அதுக்கே இவ்ளோ பேர் வந்து காத்து கிடக்கறோம் அப்புறம் எதுக்கு அலங்காரம் செஞ்சு வைக்கணும்? என்றேன்.

ஆம் அங்கே அவ்வுளவு பேர் தான் வருசையில் நின்றிருந்தோம். விசா வாங்கும் போது கேட்ட அதே கேள்விகள் மேலும் பிசினஸ் மீட்டிங்க்கு எதுக்கு ஒரு மாதம் தங்க வேண்டும் என்ற கேள்வி வேறு. அதை எல்லாம் சமாளித்து ஒரு ஸ்டாம்ப் அந்த பாஸ்போர்டில் வாங்கினால் தான் அமெரிக்கக் காற்றை சுவாசிக்க முடியும்.

அந்த அமெரிக்க சுவாசம் பற்றிய கதை அடுத்த பதிவில் ...


Monday, May 28, 2018

#BanSterlite

ஏதோ ஒரு கூட்டத்தில் யாரோ ஒருத்தன் செருப்பு எரிஞ்சா, அந்த செருப்பு தயாரித்த நாள் முதல், நிறுவனம் வரை போய் விலாவரியா அலசும் ஊடகங்கள் தூத்துக்குடி Sterlite நிறுவனம் என மட்டுமே மேம்போக்காக பேசிவிட்டு வேதாந்தா என்ற பெயரை கூட சொல்லாது ஒதுங்கிக்கொள்வதற்க்கு அவர்களின் பங்கு விலை சரிய கூடாது என்ற அக்கறையோ? இவர்களுக்கு ஏன் அந்த அக்கறை?




x

வேலை வாய்ப்பு என்ற பெயரில் உள்ளே வந்த வேதாந்தா நான்கு லட்சம் மக்கள் வாழும் துத்துக்குடியில் 1500 பேர், குடுபத்திற்கு நான்கு என்றாலும் 0.015% பேர் பலனடையே 1993ல் காங்கிரஸ் ஆட்சியில் நரசிமராவ் அடிக்கல் நாட்டி துவங்கியது.

2013 வரையில் 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுதாக தமிழக அரசு (ஜெயலலிதா) குற்றம் சாட்டி சென்னை உயர் நீதி மன்றம் இதனை மூட உத்தரவிட்டது. அதே ஆண்டில் உச்ச நீதி மன்றம் அக்குற்றங்களுக்காக மூடுவது என்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்று கூறி 100 கோடி அபராதம் விதித்து மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது.

இந்த நிலையில் 3 star appreciation என்ற விருதை 2014ல்சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தந்து கௌரவித்தது. 2015ல் Green Manufacturing Unit என்ற விருதை பெற்றது (பஜக ஆட்சி). இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டதில் சில மாற்றங்கள் கொண்டுவர பட்டது, அதில் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்தாலும் சம்பத்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதில் இருந்து விலக்கு அளித்தனர் மேலும் அபராத தொகை 5-10கிமி வரை பாதிப்பு இருந்தால் 5 கோடி என்ற அபராதம்  10 கோடி வரை என மாற்றப்பட்டதே தவிர நடக்கும் அசம்பாவிததிற்கு ஏற்ப கணக்கிட்டு கேட்க்கும் படி இல்லை.

இப்படி ஒவ்வொரு கட்சியும் இவர்களுக்கு குடை பிடிக்க இப்போது 144 தடை உத்தரவை ஒரு தனியார் நிறுவனம் நீதிமன்றத்திடம் கேட்டு பெற்று தூத்துக்குடியில் ஒரு வெறியாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.

அப்படிபட்ட வேதாந்த குழுமம் யார் என தேடினால் Sterlite Tech என்ற நிறுவனம் வந்து நிற்கிறது, இது தூத்துக்குடியை உலுக்கும் sterlite Copper நிறுவனம் அல்ல ஆனால் இதுவும் அதே அனில் அகர்வால் நிறுவனமே. இது பக்தாள் எல்லாம் பெருமையாக பேசும் ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற அரசு சார் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவில் காப்புரிமைகள் மீறல் வழக்கு, இந்தியாவில் 2002ல் சுங்க வரி எய்ப்பு வழக்கு என பல குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தோடு தான் இன்றைய பிரதமர் மோடியும் கூட்டு வைத்து smart சிட்டி, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கப்போகிறார். இப்படிபட்ட அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தை பற்றி எந்த ஊடகம் விவாதிக்கும்? 144 மட்டுமென்ன அவசர காலம் பிரகடனம் செய்துகூட இந்த ஆலை தொடரந்தாலும் ஆச்சர்யமில்லை.

இங்கு நடக்கும் எந்த தீங்கிற்கும் அந்த கட்சி இந்த கட்சி என பாகுபாடே பார்க்க தேவையில்லை மத்திய மாநில கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்த்தே நமக்கு குழி பரித்திருப்பர். இனியேனும் பக்தாள் யாரும் இது திமுக துவங்கியது, காங்கிரஸ் அடிக்கல் நாட்டியது என பிரித்து பேச வேண்டாம்.

2017 ல் உச்ச நீதிமன்றமே வெளி நாட்டு நச்சு கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டுவதற்கு இந்தியா குப்பை தொட்டி அல்ல. இந்த கழிவுகளால் வருமானம் இருந்தாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இதை நிறுத்த உத்தரவிட்டது. எனவே முற்போக்கு கழகங்களோ, காங்கிரசோ, பாஜகாவோ மொத்த இந்தியாவையும் கூருபோட்டோ குப்பையாக்கியோ விற்கவே இருக்கிறார்கள்.

இதனை எல்லாம் எதிர்த்து போராடினால் அந்நிய கைக்கூலியாகவும், தேச துரோகியாகவுமே நாம் சித்தரிக்கப்படுவோம்.


Tuesday, August 15, 2017

கும்பகோணத்திலிருந்து கோரக்பூர்

கோரக்பூர் – 70 மழலைகள் இறந்து விட்டனர். இதற்கு இடையில் சுதந்திர கொண்டாட்டம் அவசியமா என்ற கேள்வி எழுவது தவிற்க இயலாதது. கொண்டாட்டம் தேவை இல்லை ஆனால் கேள்வி கேட்க்கும் சுதந்திரம் பெற்றுத்தந்தவர்களை நினைவு கூற இந்த நாள் அவசியம். சரி இந்த கோர சம்பவம் யாருடைய தவறு யார் அலட்சியம், யோகியா, அந்த பிராணவாயு  தருவதற்கு மறுத்த புஷ்பா சேல்ஸ் நிறுவனமா?

இந்த கேள்விகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கும்பகோணம்  ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை நினைவுகொள்வோம். 2004 சூலை 16 அன்று நடந்தது அந்த கோரா விபத்து(!?)

இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் ஆணைக்குழு 2006 ஆம் ஆண்டு சமர்பித்த அறிக்கையின்படி, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அதில் வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஆய்வு செய்யலாம். என்று சொல்லப்பட்டதை இன்று நடைமுறை படுத்துவது எந்த அளவு சாத்தியம். பள்ளிகளில் இடம் கிடைப்பதற்கே தவமாய் கிடக்கும் இவர்கள் ஆய்வு செய்வார்களா? இந்த சிந்தனை ஏன் அந்த நீதி அரசர்களுக்கு வரவில்லை. நமக்கு நம்மை நம் உரிமைகளை காக்க சட்டம் உள்ளது ஆனால் அதை எடுத்து கையாள தான் இங்கு நமக்கு தெம்பு இல்லை.

சரி இதன் பின் பள்ளி விபத்துக்கள் நடக்கவில்லையா, பள்ளி பேருந்துகள் விபதுக்குல்லாகவில்லையா?

மீண்டும் கோரக்பூர் – வியாபாரத்தில் கொடுத்த பொருளுக்கு பணம் சரிவர கட்ட தவறினால் மேற்கொண்டு பொருள் தந்து நிலுவை தொகையை ஏற்றிக்கொண்டு போனால் புஷ்பா சேல்ஸ் எப்படி வியாபாரம் செய்ய முடியும், இது தர்மம் தானே, என இன்று சுதந்திர தின கொண்டாட்டத்தை வெறுப்பவர்களும் அடுத்த 10 வருட விசாரனையில் இப்படி பேசக்கூடும்.


ஒரு மூன்று மாதம் பின்னோக்கி செல்வோம் போர்பஸ் பத்திரிக்கை உலகின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிட்டது, முதல் நாள் ஒரு பெயர் அடுத்த நாள் மீண்டும் பில் கேட்ஸ் தான் என நம் சட்டமன்ற தேர்தல் நிலவரம் போல் மாறியது. அதில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் குழப்பமேதும் இன்றி முதலிடம் அம்பானி தான். ஆனால் அதில் முதல் நூறு பேர் யார், அவர்கள் செய்து வரும் தொழில் என்ன என்று அலசியபோது அதில் முதல் ஐந்து தொழில்கள், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கட்டுமானம் என முதல் இடத்தில ஒய்யாரமாக இருப்பது மருந்தும் அது சார்த்த தொழில்களும் தான்.

இம்பெரியல் பேங்க் (Imperial Bank of India) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) என 1959ல் பொதுவுடைமையாக்கி இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து இதர வங்கிகளை வாரி அனைத்துக் கொண்டது போல, பர்மா ஆயில் பாரத் பெற்றோலியம் என  1976ல் தேசியமயமாகி இன்று வரை பொது மக்களுக்கு சேவை செய்வது போல இந்த பள்ளிகள், மருத்துவம், மருத்துவம் சார்ந்த தொழில்கள் எல்லாம் பொதுவுடைமையாக்க அரசாங்கம் முன் வரலாமே. இதனை விடுத்தது ஒவ்வொரு முறையும் ஆணைக்குழு அமைத்து அரசானை பிறப்பித்து அதை நடைமுறை படுத்த ஒரு குழுவை அமைத்து இப்படி குழு குழுவாக அமைப்பது தவிர்க்கலாமே.

தமிழ் நாட்டில் சாராயக்கடையை அரசாங்கம் அதன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல இந்த மருத்துவத்தையும், கல்வியையும் அரசாங்கம் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இத்தகைய வியாபார நோக்கில் நடக்கும் போக்கு மாறி இத்தகைய நிகழ்வுகளை தடுக்கலாமே. ஆனால் ஆள்பவர்கள் அதை குடும்பத் தொழிலாகவே செய்து வரும்போது இது எப்படி சாத்தியம்.

இந்தகைய சிந்தனை அவர்களுக்கு வராது காரணம் நம் பிரதமரை சுற்றி அமர்ந்திருப்பது வியாபாரிகள், இவர் ஆலோசனை நடத்துவதும் வியாபாரிகளோடு தான். அதனால் தான் இப்படி நாடு போய்கொண்டு இருக்க இன்னும் அரசாங்கத்திடம் இருப்பதையும் தனியாரிடம் ஒப்படைக்கவே நேரம் பார்த்து வருகிறார், சேலம் இரும்பாலை, ஏர்  இந்தியா என போகிறது அரசின் திட்டங்கள்.

எழுபதாம் முதல் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

Wednesday, August 10, 2016

ஐரோம் சர்மிளா


ஐரோம் சர்மிளா, நவம்பர் 2 , 2000 மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பத்து பேர் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் சுடப்பட்டு இறந்தனர். அதில் 1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணியும் அடக்கம்.

இந்த படுகொலைக்கு எதிராக 28 வயது ஐரோம் சர்மிளா நவம்பர் 4 உண்ணா போராட்டம் துவங்குகிறார். அன்றையில் இருந்து மூன்றாம் நாள் சர்மிளா தற்கொலைக்கு முயல்வதாக கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கிறது காவல்துறை. வலுகட்டயமாக மூக்கு வழியே உணவு தரப்பட்டுகிறது. இந்திய அமைப்பு சட்டத்தின்படி தற்கொலை முயற்சிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை என்பதால் அன்றையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விடுவித்து மீட்டும் கைது செய்யப்படுகிறார்.

இந்திய தலைநகர் டெல்லியில் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாகி உயிர் விட்ட பெண்ணை இன்று வரை உரித்து உரித்து பார்த்துக்கொண்டு இருக்கிறது நீதித்துறையும் அரசாங்கமும். நீதிமன்ற வேலை நேரம் முடித்து மீண்டும் தனி அமர்வில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் மேல் முறையீட்டை கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அவர்களுக்கு என வாதாட வக்கீல் தரப்படுகிறது. அவரும் வாய்க்கு வந்த வண்ணம் இன்னும் அந்த பெண்ணை அறுத்து கூறுபோட்டு குற்றவாளிகள் விடுதலைக்கு அயராது பாடுபடுகிறார்.

ஆனால் இந்த ஐரோம் சர்மிளா விடுதலை கைது விடுதலை கைது என மாறி மாறி தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கை உண்ணாமல் நோம்பு இருந்து கழித்ததன் காரணம் கேட்க ஆராய இன்று வரை எந்தத்துறையும் செவி சாய்க்கவில்லை.

16 வருடமாக ஐரோம் சர்மிளா இருந்ததன் நோக்கம் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 திரும்பப் பெற வேண்டும் என்பது இதற்க்கு இடையில் கருணாநிதி ஈழம் மலர உண்ணாவிரதம் இருந்தார், ரஜினி உடல் நிலை தேற ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர், ஜெயலிதா விடுதலை அடைய தமிழகமே(!!??) உண்ணாவிரதம் இருந்தது.

வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள அந்த சட்டம் ஆயுதப்படைக்கு தரும் அதிகராம் யாதெனில் போராளி என சந்தேகிக்கும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்ககாலம் சுட்டும் கொல்லலாம். மும்பையை அலறச் செய்த தீவிரவாதிக்கு தனி சிறை தனி நீதிமன்றம் அமைக்கத் தெரிந்த அரசிற்கு கிழக்கில் உள்ள போராளிகளின் கோரிக்கைக்கு செவி கொடுக்க ஏனோ வலிக்கிறது.

இன்னமும் அந்த சட்டம் அமலில் உள்ளது அவரினவரின் அடுத்த அடி மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கிற்கு எதிராக சுஎத்சியாக தேர்தலில் போட்டியிடப்போவது

வரும் 15ம் தேதி வாய்கிழிய அகிம்சை போராட்டம் மூலம் கிட்டிய சுதந்திரம் என மார்தட்டும் போது நினைவில் கொள்ளவேண்டிய நிகழ்வு, உண்ணா போராட்டம் கைவிடப்பட்டவுடன் இம்பால் மாஜிஸ்திரேட் கோர்ட் தலைமை நீதிபதியிடம் ரூபாய்10ஆயிரத்திற்கான பத்திரத்தை அளித்து தற்கொலைக்கு முயல்கிறார் என அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 23ம் தேதிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டே பிணையத்தில் விடுவிக்கபட்டார் ஐரோம் சர்மிளா. கோட்சே அன்றே காந்தியை சுட்டது காந்திக்கு நல்லது என இன்று நீதித்துறை இன்று நிருபித்துக் காட்டியது.


Saturday, January 21, 2012

உடைந்து விழும் முதுகெலும்புகள்

ன்றரை ஏக்கர் நிலம், நாலு மாத உழைப்பு... மொத்த வருமானம் ஒன்பதாயிரம். இது உண்மை சம்பவத்தின் தழுவல் அல்ல, உண்மை.

சனிக்கிழமை மதியம் மணி மூன்று முப்பத்தி ஐந்து கை பேசி அழைப்பு மணி ஒலிக்கத் துவங்கியது. எடுக்க போகும் அவன், சேலம் அருகே பெயர் சொன்னால் தெரியாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தமிழகத்தின் தலைநகரில் தன் குடும்பம் தலைக்க எங்கோ உலகின் வேறு ஒரு கோடியில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு இங்கு அமர்ந்து வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரி.

சாமி சாப்டியா? ஒரு தாயின் வழக்கமான கேள்வி, அவளுக்கு ஹலோ எல்லாம் தெரியாது.

ம்ம்ம், நீ மா..?

ஆச்சு பா

சொல்லு மா

அது ஒன்னும் இல்ல, இந்த தடவ நடவு ஒன்னும் செரியாவரலையா... இரு நொடி இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.
அது ஏதோ கடைசிய மிசின் வெச்சு அறுத்ததால ஒரு ஒம்பதாயிரம் நின்னுருக்கு.

எ.. ஒம்பதாயிரம் தானா, என்ன ஆச்சு.. ஏ..?

போன தடவ வந்தப்ப சொன்னா இல்ல, இங்கிலீஷ் பூச்சி மருந்து எல்லாம் வேணாம். எதோ தெருஞ்சவங்க ஏழு வயசு புள்ளைக்கு இரத்தத்துல கான்சரு, இந்த நடவுல கண்ட மருந்தெல்லாம் வேணாம்னு.

ஆமா

புறவு எல்லாம் நம்ம மஞ்சலு, வேப்ப கோட்டை தான் போட்டது. ஆனா சுத்துபாட்டுல பாரு எல்லாரும் அந்த இங்கிலீஷ் மருந்துதானே தெளிக்கராவுக. பின்ன எல்லா பூச்சியும் நம்ம நெல்ல கடுச்சு புடுச்சு. அதுனாலத்தா பா

இப்ச்

இரு உங்க உங்க அப்பா பேசுறாரு.. மாமா இந்தாங்க

என்னடா, இனி எல்லா நடவு நிறுத்திடலாமா... ம்ம்ம்?

என்ன பதில் சொல்ல என யோசித்த வாரே உதடு கடித்தான்.



இவன் பதில் எதிர்பாராமல் தொடர்ந்தார் நடவு செலவு, மோட்டாரு, கரண்டு அது இதுன்னு பதினஞ்சு ஆச்சு மொத்தம், நாலு மாசத்துக்கு. பின்ன வந்தது அப்டினா இருவத்தி நாலு. அதுதா அறுவடைக்கு ஆள் விடாம மிசின் வேச்சதால பதினஞ்சு ஆச்சு இல்ல இந்த ஒம்போது வந்திருக்காது

ம்ம்ம்ம்
ஆளுக்கு இருநூத்து ஐம்பது கேட்கரானுங்க. அதுவும் சரி தான் பஸ், பால் கண்டது கலிதுனு விலை ஏறிடுச்சு இல்ல. உனக்கு அங்க பரவால இல்ல. நல்ல இருக்க இல்ல நீ?

ம்ம்ம்.. நல்லா இருகேனுங்க பா

பேசி முடித்ததும் அந்த பதில் தெரியாத கேள்வி தான் ஓடியது அவன் காதுகளில்.

என்னடா, இனி எல்லா நடவு நிறுத்திடலாமா... ம்ம்ம்?
நவதுவாரங்கள் இருந்தும் அது அவன் மனதில் மோதி மோதி எதிரொலித்தது.

தான் படிக்காது விவசாயத்தில் இருந்திருந்தால் இன்று?

நாலு மாத வருமானம் ஒன்பது ஆயிரம் தான் என்றால் இன்று என்ன சாப்பிட்டிருக்க 
முடியும்?

இப்படி நடவு நிறுத்தினால்.. நாளை விவசாயம் என்ன ஆகும்?

ஒரு மனிதனை கொன்றால் தான் இன்னொருவன் வாழ முடியும் என்கிற  நிலை ஏன்?
உலக நாடுகள் எல்லாம் தடை செய்த பூச்சி மருந்தை. இந்தியாவில் கேரளா மாநில விவசாய்கள் போராடி வேண்டாம் என்ற மருந்தை தானும் வேண்டாம் என்றதன் விளைவா இது?

ஒவ்வொரு விவசாயி இறக்கும் போதும், இப்படியாக விவசாயம் நிறுத்தப்படும் போதும் நம் வாழ்நாளில் ஒவ்வொரு வேலை உணவு குறைகிறது என்பதை நாம் உணர வேண்டிய நாள் கடந்து பல வருடம் ஆகியும் இன்னும் இதை பெரியதாய் கருதாதது ஏன்?

மேலும், இன்றையில் இருந்து ஒன்பது வருடங்களுக்கு முன்பு வரை தொழில்’ (occupation) என்ற கேள்விக்கு விவசாயம் (agriculture) என்றே இருந்தது நான் பூர்த்தி செய்த படிவங்களில் எல்லாம். ஆனால் அப்பா இறந்த பின்பு, இன்று மாறிப் போய் இருக்கிறது தனியார் (Private) என்று.

--சித்ரன்