Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Saturday, January 14, 2017

தடைகளை தகர்க்க ..

தீபாவளி நேரம் இரவு பத்து மணிக்கு ஊருக்கு கிளம்பினேன், ஆட்டோ எதுவும் கிடைக்க வில்லை. தீபாவளி கூட்டம் இருக்கும் திரும்ப முடியாது என மறுத்தனர். சில நிமிட அலைச்சலுக்கு பின் ஒரு வழியாக கிட்டியது. பத்து வாரத்துக்கு பின் இந்த வழியாக வருவதாக சொன்னார் ஓட்டுநர். இதற்கும் அவர் சேர் ஆட்டோ ஓட்டுபவர், ‘ரெண்டு பக்கமும் திறந்து வெச்சிருக்கானுங்க சார். காலைல இருந்து சம்பாதிக்கறது எதுவும் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியல’ என்றார். நல்லது பத்து மணிக்கு மேல் தான் அவரை அழைத்து வந்திருக்கிறேன் நிம்மதியாக ஊருக்கு போய் சேர்ந்தேன்.

கள்ளுண்ணாமை என சொல்லி கள் இரக்குதல் தடை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கள்ளச்சாராயம் வீதிக்கு வந்தது, அதனால் உயிர் பலிகள் அதிகரித்தது. இதை சரி செய்ய என மதுபான கடைகள் அரசாங்க அனுமதியோடு வந்து இன்று அதை அரசே பொறுப்பேற்று தெருவுக்கு ஒன்றாய் நடத்தியும் வருகிறது.

கள்ளு, கள்ள சாராயம், மேற்க்கத்திய மது பானங்கள் எல்லாமுமே போதை தரும். ஆனால் அது உடலில் செயல்படும் முறை வெவ்வேறு மாதிரி இருக்கும்.

கள், தென்னை மற்றும் பனை என மரங்களில் இருந்து இரக்கப்படுகிறது. உடல் சூட்டை நீக்கக் கூடியது. மேற்க்கத்திய மது பானங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும். அவர்கள் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு அது உகந்ததாக அவர்கள் பாரம்பரியத்தோடு விழாக்களில், திருமணங்களில் கூட இருக்கும்.இப்படி சூட்டை கிளப்பும் மதுவை நம் ஊர் தட்பவெட்ப நிலைக்கு குடிக்க உடல் கெட்டுவிடுகிறது.

கள்ளைத் தொடர்ந்து சேவ சண்டை தடை செய்யப்பட்டது. கோழி வளர்த்தால் முட்டை காசு கொடுக்கும், கோழியும் ஒரு வயதில் கறியாகி காசாகும். சேவல் சண்டைக்கு என வளர்க்கப்பட்டு, அது கோழிகளோடு கூடி நாட்டு கோழி முட்டையிட்டு வந்தது. சேவ சண்டை முற்றிலும் தடை செய்யப்பட நாளடைவில் நாம்  ப்ராயிளர் கோழிக்கு மாறி விட்டோம். வியாதிகளும் பெற்று விட்டோம். நாட்டு கோழி வளர்த்தவர்கள் நிலை மறந்து விட்டோம்.

இன்று சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. நாளையே காளைகள் அடி மாடுகளாகாது. பசுவுக்கு கருவூட்ட சினைகள் விற்கும் நிறுவனங்கள் பெருகும். அடுத்த தலைமுறை இனி காளை எதற்கு வளர்க்க வேண்டும் கருவூட்ட சினைகள் ஊசியில் ஏற்றப்படும் போது என கணக்கிட்டு காளைகள் வளர்ப்பு நிறுத்தப்படும். நாட்டு மாடுகள் வெளி நாட்டு காளையின் கன்றுகளை ஈன்று எடுக்கும். இப்படி நாட்டு மாடுகள் மெல்ல மெல்ல வெளி நாட்டு மாடுகளாக மாறிவிடும்.

வெளி நாட்டு உணவு என்பது தீங்கு இல்லை, ஆனால் உடல் உறுப்புகள் நாம் வாழும் இடத்திற்கு ஏற்ப அதன் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார் போல் மாறுபட்டிருக்கும். எனவே நாம் வாழும் மண்ணில் ஏறத்தாள 400 மையில் சுற்று வட்டாரத்தில் விளையும் உணவுகள் நம் உடலுக்கு ஏற்றதாக இருக்கும். மேற்க்கத்திய உணவுகள் தீங்கானவை இல்லை அது நம் உடலுக்கு ஒவ்வாதவை.

எனவே கள்ளை முற்றிலும் தடை செய்யாது அரசே கள்ளுக்கடைகளை இப்போது மேற்கத்திய மது பானங்கள் விற்பது போல் நடத்தி இருக்கலாம், பனை மரங்கள் மிஞ்சி இருக்கும். சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் என கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி அதிகரித்திருக்கும். 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது.

இன்று இவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளி நாம் அந்நிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறோம் என்பது நிதர்சனம். அந்நிய முதலீடு நாட்டின் வளர்ச்சி இல்லை வீழ்ச்சி தான். கிழக்கிந்திய நிறுவனம் பதினேழாம் நூற்றாண்டில் முதலீடு செய்ததின் பலன் சும்மார் 200 ஆண்டுகள் அடிமை இந்தியா. இது இன்னும்மொரு படை எடுப்பே வளர்ச்சி இல்லை.

பாரம்பரியம் முற்றிலும் தடை செய்யப்படும் போது அதன் விளைவுகள் கட்டாய மாற்றமாக இருக்கும். எந்த மாற்றம் நிகழும் போதும் அழிவுகள் அதிகம் இருக்கும். அதில் மிஞ்சியவையே மாற்றத்திற்கு உட்பட்டு வளரத் துவங்கும். இப்போது தேவை இல்லாத மாற்றத்தினால் அழிவுக்கு கட்டாயமாக தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இத்தகைய நிலையை தடுக்க, கள்ளுக்கடை, சல்லிக்கட்டு போன்றவை தகுந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு தொடரப் படவேண்டும். அதை விடுத்தது முற்றிலும் தடை என்பது அறிவுள்ளவன் செய்யும் செயல் இல்லை.


Thursday, January 15, 2015

மிருக வதை!

து வதை
உண்ண உட்காரும்போது
தள்ளி விடுவதும் வதையே..
நாம் குடிக்கும்
பாலும், தயிரும்..
கண்ணனவன் உண்ணும்
வெண்ணையும் மிருக வதையே!
 தன் கன்றுக்கு சுரக்கும் பாலை
திருடும் கள்ளர்கள் தானே நாம்..
நமக்கு கடவுளுக்கு
பின் காசுக்கும் விற்கும் நமக்கு
என்ன வதை பற்றி பேச வக்கு??
தன் மனம் போல் இல்லாது
அடக்கி தானே இங்கு உளவுக்கே பழக்கினோம்..
அப்படி பார்க்கையில் விவசாயமும் வதையல்லவோ?
தவறுகளை களைவது தானே முறை
பேருந்தில் கற்பழிக்கப்பட்டால்
பேருந்து ஓட்டத்தையே நிறுத்துதல் நியாயமாகுமோ?
முறை செய்வோம்... தழுவுதல் தொடர்வோம்!




Saturday, January 21, 2012

உடைந்து விழும் முதுகெலும்புகள்

ன்றரை ஏக்கர் நிலம், நாலு மாத உழைப்பு... மொத்த வருமானம் ஒன்பதாயிரம். இது உண்மை சம்பவத்தின் தழுவல் அல்ல, உண்மை.

சனிக்கிழமை மதியம் மணி மூன்று முப்பத்தி ஐந்து கை பேசி அழைப்பு மணி ஒலிக்கத் துவங்கியது. எடுக்க போகும் அவன், சேலம் அருகே பெயர் சொன்னால் தெரியாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தமிழகத்தின் தலைநகரில் தன் குடும்பம் தலைக்க எங்கோ உலகின் வேறு ஒரு கோடியில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு இங்கு அமர்ந்து வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரி.

சாமி சாப்டியா? ஒரு தாயின் வழக்கமான கேள்வி, அவளுக்கு ஹலோ எல்லாம் தெரியாது.

ம்ம்ம், நீ மா..?

ஆச்சு பா

சொல்லு மா

அது ஒன்னும் இல்ல, இந்த தடவ நடவு ஒன்னும் செரியாவரலையா... இரு நொடி இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.
அது ஏதோ கடைசிய மிசின் வெச்சு அறுத்ததால ஒரு ஒம்பதாயிரம் நின்னுருக்கு.

எ.. ஒம்பதாயிரம் தானா, என்ன ஆச்சு.. ஏ..?

போன தடவ வந்தப்ப சொன்னா இல்ல, இங்கிலீஷ் பூச்சி மருந்து எல்லாம் வேணாம். எதோ தெருஞ்சவங்க ஏழு வயசு புள்ளைக்கு இரத்தத்துல கான்சரு, இந்த நடவுல கண்ட மருந்தெல்லாம் வேணாம்னு.

ஆமா

புறவு எல்லாம் நம்ம மஞ்சலு, வேப்ப கோட்டை தான் போட்டது. ஆனா சுத்துபாட்டுல பாரு எல்லாரும் அந்த இங்கிலீஷ் மருந்துதானே தெளிக்கராவுக. பின்ன எல்லா பூச்சியும் நம்ம நெல்ல கடுச்சு புடுச்சு. அதுனாலத்தா பா

இப்ச்

இரு உங்க உங்க அப்பா பேசுறாரு.. மாமா இந்தாங்க

என்னடா, இனி எல்லா நடவு நிறுத்திடலாமா... ம்ம்ம்?

என்ன பதில் சொல்ல என யோசித்த வாரே உதடு கடித்தான்.



இவன் பதில் எதிர்பாராமல் தொடர்ந்தார் நடவு செலவு, மோட்டாரு, கரண்டு அது இதுன்னு பதினஞ்சு ஆச்சு மொத்தம், நாலு மாசத்துக்கு. பின்ன வந்தது அப்டினா இருவத்தி நாலு. அதுதா அறுவடைக்கு ஆள் விடாம மிசின் வேச்சதால பதினஞ்சு ஆச்சு இல்ல இந்த ஒம்போது வந்திருக்காது

ம்ம்ம்ம்
ஆளுக்கு இருநூத்து ஐம்பது கேட்கரானுங்க. அதுவும் சரி தான் பஸ், பால் கண்டது கலிதுனு விலை ஏறிடுச்சு இல்ல. உனக்கு அங்க பரவால இல்ல. நல்ல இருக்க இல்ல நீ?

ம்ம்ம்.. நல்லா இருகேனுங்க பா

பேசி முடித்ததும் அந்த பதில் தெரியாத கேள்வி தான் ஓடியது அவன் காதுகளில்.

என்னடா, இனி எல்லா நடவு நிறுத்திடலாமா... ம்ம்ம்?
நவதுவாரங்கள் இருந்தும் அது அவன் மனதில் மோதி மோதி எதிரொலித்தது.

தான் படிக்காது விவசாயத்தில் இருந்திருந்தால் இன்று?

நாலு மாத வருமானம் ஒன்பது ஆயிரம் தான் என்றால் இன்று என்ன சாப்பிட்டிருக்க 
முடியும்?

இப்படி நடவு நிறுத்தினால்.. நாளை விவசாயம் என்ன ஆகும்?

ஒரு மனிதனை கொன்றால் தான் இன்னொருவன் வாழ முடியும் என்கிற  நிலை ஏன்?
உலக நாடுகள் எல்லாம் தடை செய்த பூச்சி மருந்தை. இந்தியாவில் கேரளா மாநில விவசாய்கள் போராடி வேண்டாம் என்ற மருந்தை தானும் வேண்டாம் என்றதன் விளைவா இது?

ஒவ்வொரு விவசாயி இறக்கும் போதும், இப்படியாக விவசாயம் நிறுத்தப்படும் போதும் நம் வாழ்நாளில் ஒவ்வொரு வேலை உணவு குறைகிறது என்பதை நாம் உணர வேண்டிய நாள் கடந்து பல வருடம் ஆகியும் இன்னும் இதை பெரியதாய் கருதாதது ஏன்?

மேலும், இன்றையில் இருந்து ஒன்பது வருடங்களுக்கு முன்பு வரை தொழில்’ (occupation) என்ற கேள்விக்கு விவசாயம் (agriculture) என்றே இருந்தது நான் பூர்த்தி செய்த படிவங்களில் எல்லாம். ஆனால் அப்பா இறந்த பின்பு, இன்று மாறிப் போய் இருக்கிறது தனியார் (Private) என்று.

--சித்ரன்