நான்
மறந்துவிட்டேன்
உன் கரத்தில் புதைந்த என் கரத்தை
சாலை ஓரம் நடக்கையில்
யாரும் இல்லா இடம் வரும் போது
உன் கரம் தேடி பிடித்த என் சந்தோசம்
நான் மறந்துவிட்டேன்
யாரோடு நீ பேசினாலும்
யாது வேலை எனக்கு இருந்த போதும்
கண்கொட்டாமல் உன்னை பார்த்த நொடிகள்
நான் மறந்துவிட்டேன்
ஊரே கேட்க
உன்னை நான் கேலி செய்து சிரித்த
சிரிப்புகள்
நான் மறந்துவிட்டேன்
உன் குறுஞ்செய்தியின் வருகைக்கு
காத்திருந்து
கடந்து போன நொடிகளை ஏமாற்றி – மீண்டும்
காத்துக்கிடந்த காலங்கள் யாவையும்
நான் மறந்துவிட்டேன்
எனக்காக நீ அழுத அழகை யாவையும்
உன் அழகான பொய்கள் கேட்க நான் பூண்ட
பொய் கோபம் யாவையும்
என் சோகம் தீர்க்க நீ சொன்னா
வார்த்தைகள் யாவையும்
உன் கண்ணில் என்னை நான் கண்டு
வெட்கப்பட்ட நேரம் யாவையும்
என் முகம் எங்கும் பரவிய உன் மூச்சு
காற்றையும்
நான் மறந்துவிட்டேன்
என் தந்தைக்கு மகளாய்!
என்றைக்கும் சுமையென சுகமான உன்
நினைவுகள்
கண்ணீரால் சூடாக்கும் என்
தலையனையை...
ஒரு பெண்ணாக அது வழிந்திட வழி கொடுப்பேன்!