Sunday, January 6, 2019

அமெரிக்க கனவு


முப்பது வயதை கடந்த எல்லோரும் எதிர்க்கொள்ளும் பொதுவான கேள்வி ‘எப்போ தான் கல்யாண சாப்பாடு போடுவே?’ என்பது போன்று இப்போது வேலை கிடைத்தவுடன் எதிர்கொள்ளும் கேள்வி ‘வெளி நாடு போக ஏதும் வாய்ப்பு இருக்குமா?’ பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் வெளி நாடு என்றாலே அமெரிக்கா தான் என இருந்தது இன்னமும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த கனவு உண்டு.
அப்படி எந்த கனவும் இல்லாத எனக்கு அது நினைவானது. அதற்க்கான முதல் வேலை, விசா

விசா :
‘சாமி நான் எல்லா உங்க வீட்டு உள்ள  வர கூடாதுங்க’ என ஒரு சமூகத்தினரையே சொல்ல வைத்த சாதிய கொடுமை போன்றது இந்த அமெரிக்க விசா வாங்குவது. நடை பாதை நடப்பதற்கே என்று சொல்லி வியாபாரிகளை, அங்கேயே குடும்பம் நடத்தும் நாடோடிகளை விரட்டும் அரசாங்காம் அண்ணா மேம்பாலம் அருகில் செம்மொழி பூங்கா எதிர் புறம் இருக்கும் நடை பாதையில் எவரையுமே நடக்க விடாது. அங்கே தான் இந்த விசா வாங்க வரிசையில் நிற்க வேண்டும். கைபேசி, earphone, headphone, கார் சாவி (அதில் ஏதும் ஒலி, ஒளி வருமானால்) என எதுவும் உள்ளே அனுமதி கிடையாது. மற்றதை எல்லாம் காரில் போட்டுவிட்டு உள்ளே போகலாம், அந்த கார் சாவி? அதை 500 ரூபாய்க்கு பாதுகாக்கும் ஒரு இடமும் அங்கு உண்டு, அது பஞ்சர் ஒட்டும் கடை. அங்கே இதை எல்லாம் குடுத்துவிட்டு தான் உள்ளே போக வேண்டும்.

கை கடிகாரம் கூட கையில் கட்டி இருக்க கூடாது. இப்படி மொத்தத்தையும் கொடுத்துவிட்டு நடை பாதையில் வரிசையில் நின்றால் உள்ளே செல்ல ஒரு மணி நேரம் ஆகும். அந்த வருசையில் எனக்கு முன் ஒரு தம்பதி நின்றிருந்தார்கள். அரை அரை அடி நகர்ந்து தூதரகம் உள்ளே போனால் அங்கே உட்கார அனுமதி இல்லை. கோவில்களில் பண்டிகையின் போது வளைந்து வளைந்து மூங்கில் கட்டிவிட்டு மொத்த கூட்டத்தையும் வரிசையில் நிற்க வைப்பது போன்று நிற்க வைத்தனர். நீண்ட நேரம் நின்ற களைப்பில் ஓரமாய் இருந்த திண்டில் அமர்தார் எனக்கு முன்னால் இருந்த பெண்மணி, உடனே ‘madam you should not sit please stand in the line’ என பின்னால் இருந்து சத்தம் கேட்டது. சட்டென ‘so do we need to kneel down in front of the interviewer?’ என கேட்க வாய் வந்தது ஆனால் இந்த விசா எனக்கு கிடைக்க வில்லை என்றால் ஒன்ருமிலை இதனால் அவர்களுக்கும் வாய்ப்பு போனால் இன்னொரு முறை சில ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டும்.. அடக்கிக்கொண்டேன்.

சர்வதேச முனையம்:
விமானத்தில் கழுவ தண்ணீர் தர மாட்டார்களே எப்படியும் 23 மணி நேர பயணம் இதையும்  அடக்க வேண்டுமோ என்ற சிந்தையோடே விமான நிலையம் வந்தடைந்தேன். என்னோடு இன்னும் மூன்று பேர் உடன் வேலை பார்ப்பவர்கள் அவர்களுக்கு அமெரிக்காவில் சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற சிந்தனை.

உள்ளே சென்றவுடன் போர்டிங் பாஸ் வாங்க வேண்டும் அதிலும் நம் ஊர் கோவில்களில் 500 ருபாய் டிக்கெட் வாங்கினால் சாமி அருகில் அமர்ந்து தரிசனமும் மாலையும் தர்ம தரிசனம் போகும் போது அப்படியே எட்டி கும்பிடு போட்டுவிட்டு போக வேண்டுமே அதே முறை தான், பிசினஸ் இக்ளாஸ், எகானமி இக்ளாஸ் தனி தனி வரிசை. பிசினஸ் இக்ளாஸ் மக்களுக்கு விமானம் புறப்படும் வரை காத்திருக்க தனி அறை, சாப்பாடு, சரக்கு என சகல வசதிகளும் உண்டு. விமானம் வந்தவுடன் முதலில் பிசினஸ் இக்ளாஸ் மக்கள் தான் ஏற வேண்டும் அடுத்து தான் எகானமி இக்ளாஸ்.

ஆகாயத்தில் பூகம்பம்:
எகானமி இக்ளாசில் நான்கு பேர் அமரும் இடத்தில் பிசினஸ் இக்ளாசில் நான் ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தேன். இப்பொது எல்லாம் விமான பயணம் அறிய ஒரு செயல் இல்லை தான் ஆனால் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து செல்வது போல் இல்லை இந்த பிசினஸ் இக்ளாஸ். அதிகமாக படத்தில் கூட பார்த்திராத ஆடம்பரம் (YouTube’ல் பிசினஸ் இக்ளாஸ் விமான பயணத்தை பற்றியும் விமர்சனம் உண்டு தெரியாதவர்கள் தேடி பார்க்கவும்)

https://www.youtube.com/watch?v=_yhZDsctiZg
முதலில் தோஹா வரை ஒரு விமானம், ஐந்து ஆறு மணி நேர பயணம். அந்த பிசினஸ் இக்ளாசில் அருகில் இருப்பவர் முகம் பார்க்க முடியாத அளவுக்கு மறைப்பதற்கு வசதி உண்டு. ஆனால் அந்த வசதி எதற்கு என இதுவரை விளங்கவில்லை. இருக்கையை சாய்ப்பதற்கு, நகர்த்துவதற்கு, நீடுவதற்கு தனி தனி பொத்தான்கள். அடுத்து பதினாறு மணி நேர பயணம் அதில் தனி அறை போல இருந்தது. ஏறி அமர்ந்தவுடன் வெது வெதுப்பான நீரில் நினந்த துண்டு முகம் துடைக்க, குடிக்க பானம், பாதாம், பிஸ்த்த என ஏக போக கவனிப்பு. உறங்கும் போது அனிய தனி உடை, செருப்பு, சிறு பெட்டியில் முகத்திற்கு பூச ஒரு க்ரீம், ஸ்ப்ரே, கை கால்களுக்கு என தனி தனி க்ரீம்கள், கை வைக்க இடம், கால்கள் நீட்ட இடம் என ஏக போக வசதிகள் தான் ஆனால் உணவு மட்டும் சகிக்காது, பொங்கல் வடைக்கு சோயா சாசும், ஆலிவ் ஆயிலும் வேண்டுமா என்ன விசாரிக்கும் அளவு தான் அங்கு வேலை செய்பவர்களின் இந்திய உணவு பற்றிய அறிவு.

பிசினஸ் இக்ளசில் எகானமியை வீட சரி பாதிக்கும் குறைவான பயணிகளே ஆனால் இவர்களுக்கு நான்கு கழிவறைகள் அங்கு இரண்டு தான். ஒரே ஒற்றுமை எதிலும் கழுவ தண்ணீர் கிடையாது.

விமானம் புறப்பாடு பற்றி சொல்லி முடித்ததும் ஆப்ரிக்க மக்களை படிக்க வைக்க உதவுமாறு வேறு கேட்டார்கள். இவர்கள் தந்த இக்ரீம்கள், அதை போட்டு வைத்திருந்த டப்பா, சட்டை, பேன்ட், செருப்பு என மொத்தமும் இருபது இருபத்தி ஐந்து டாலர் இருக்கும். இருபத்தி மூன்று நேர பயணத்திற்கு போர்வையும் தலையனையும் தான் எடுத்து வர முடியாது மத்ததெல்லாம் அவ்வுளவு அவசியமா? அதை மிச்ச பிடித்தாலே போதுமே.

ஜார்ஜ் புஷ் இன்டர்கான்டிநென்டல் ஏர்போர்ட்
‘என்ன சார் இது நம்ம ஊர் ஏர்போர்டே பரவல போலயே. தோஹா ஏர்போர்ட் எப்படி இருந்துது’

‘எதுக்கு இங்கே வர்றே, எவ்ளோ நாள் இருப்பேனு கேட்டுட்டு தான் உள்ள விடறான் அதுக்கே இவ்ளோ பேர் வந்து காத்து கிடக்கறோம் அப்புறம் எதுக்கு அலங்காரம் செஞ்சு வைக்கணும்? என்றேன்.

ஆம் அங்கே அவ்வுளவு பேர் தான் வருசையில் நின்றிருந்தோம். விசா வாங்கும் போது கேட்ட அதே கேள்விகள் மேலும் பிசினஸ் மீட்டிங்க்கு எதுக்கு ஒரு மாதம் தங்க வேண்டும் என்ற கேள்வி வேறு. அதை எல்லாம் சமாளித்து ஒரு ஸ்டாம்ப் அந்த பாஸ்போர்டில் வாங்கினால் தான் அமெரிக்கக் காற்றை சுவாசிக்க முடியும்.

அந்த அமெரிக்க சுவாசம் பற்றிய கதை அடுத்த பதிவில் ...