Saturday, January 21, 2012

உடைந்து விழும் முதுகெலும்புகள்

ன்றரை ஏக்கர் நிலம், நாலு மாத உழைப்பு... மொத்த வருமானம் ஒன்பதாயிரம். இது உண்மை சம்பவத்தின் தழுவல் அல்ல, உண்மை.

சனிக்கிழமை மதியம் மணி மூன்று முப்பத்தி ஐந்து கை பேசி அழைப்பு மணி ஒலிக்கத் துவங்கியது. எடுக்க போகும் அவன், சேலம் அருகே பெயர் சொன்னால் தெரியாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தமிழகத்தின் தலைநகரில் தன் குடும்பம் தலைக்க எங்கோ உலகின் வேறு ஒரு கோடியில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு இங்கு அமர்ந்து வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரி.

சாமி சாப்டியா? ஒரு தாயின் வழக்கமான கேள்வி, அவளுக்கு ஹலோ எல்லாம் தெரியாது.

ம்ம்ம், நீ மா..?

ஆச்சு பா

சொல்லு மா

அது ஒன்னும் இல்ல, இந்த தடவ நடவு ஒன்னும் செரியாவரலையா... இரு நொடி இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.
அது ஏதோ கடைசிய மிசின் வெச்சு அறுத்ததால ஒரு ஒம்பதாயிரம் நின்னுருக்கு.

எ.. ஒம்பதாயிரம் தானா, என்ன ஆச்சு.. ஏ..?

போன தடவ வந்தப்ப சொன்னா இல்ல, இங்கிலீஷ் பூச்சி மருந்து எல்லாம் வேணாம். எதோ தெருஞ்சவங்க ஏழு வயசு புள்ளைக்கு இரத்தத்துல கான்சரு, இந்த நடவுல கண்ட மருந்தெல்லாம் வேணாம்னு.

ஆமா

புறவு எல்லாம் நம்ம மஞ்சலு, வேப்ப கோட்டை தான் போட்டது. ஆனா சுத்துபாட்டுல பாரு எல்லாரும் அந்த இங்கிலீஷ் மருந்துதானே தெளிக்கராவுக. பின்ன எல்லா பூச்சியும் நம்ம நெல்ல கடுச்சு புடுச்சு. அதுனாலத்தா பா

இப்ச்

இரு உங்க உங்க அப்பா பேசுறாரு.. மாமா இந்தாங்க

என்னடா, இனி எல்லா நடவு நிறுத்திடலாமா... ம்ம்ம்?

என்ன பதில் சொல்ல என யோசித்த வாரே உதடு கடித்தான்.



இவன் பதில் எதிர்பாராமல் தொடர்ந்தார் நடவு செலவு, மோட்டாரு, கரண்டு அது இதுன்னு பதினஞ்சு ஆச்சு மொத்தம், நாலு மாசத்துக்கு. பின்ன வந்தது அப்டினா இருவத்தி நாலு. அதுதா அறுவடைக்கு ஆள் விடாம மிசின் வேச்சதால பதினஞ்சு ஆச்சு இல்ல இந்த ஒம்போது வந்திருக்காது

ம்ம்ம்ம்
ஆளுக்கு இருநூத்து ஐம்பது கேட்கரானுங்க. அதுவும் சரி தான் பஸ், பால் கண்டது கலிதுனு விலை ஏறிடுச்சு இல்ல. உனக்கு அங்க பரவால இல்ல. நல்ல இருக்க இல்ல நீ?

ம்ம்ம்.. நல்லா இருகேனுங்க பா

பேசி முடித்ததும் அந்த பதில் தெரியாத கேள்வி தான் ஓடியது அவன் காதுகளில்.

என்னடா, இனி எல்லா நடவு நிறுத்திடலாமா... ம்ம்ம்?
நவதுவாரங்கள் இருந்தும் அது அவன் மனதில் மோதி மோதி எதிரொலித்தது.

தான் படிக்காது விவசாயத்தில் இருந்திருந்தால் இன்று?

நாலு மாத வருமானம் ஒன்பது ஆயிரம் தான் என்றால் இன்று என்ன சாப்பிட்டிருக்க 
முடியும்?

இப்படி நடவு நிறுத்தினால்.. நாளை விவசாயம் என்ன ஆகும்?

ஒரு மனிதனை கொன்றால் தான் இன்னொருவன் வாழ முடியும் என்கிற  நிலை ஏன்?
உலக நாடுகள் எல்லாம் தடை செய்த பூச்சி மருந்தை. இந்தியாவில் கேரளா மாநில விவசாய்கள் போராடி வேண்டாம் என்ற மருந்தை தானும் வேண்டாம் என்றதன் விளைவா இது?

ஒவ்வொரு விவசாயி இறக்கும் போதும், இப்படியாக விவசாயம் நிறுத்தப்படும் போதும் நம் வாழ்நாளில் ஒவ்வொரு வேலை உணவு குறைகிறது என்பதை நாம் உணர வேண்டிய நாள் கடந்து பல வருடம் ஆகியும் இன்னும் இதை பெரியதாய் கருதாதது ஏன்?

மேலும், இன்றையில் இருந்து ஒன்பது வருடங்களுக்கு முன்பு வரை தொழில்’ (occupation) என்ற கேள்விக்கு விவசாயம் (agriculture) என்றே இருந்தது நான் பூர்த்தி செய்த படிவங்களில் எல்லாம். ஆனால் அப்பா இறந்த பின்பு, இன்று மாறிப் போய் இருக்கிறது தனியார் (Private) என்று.

--சித்ரன்

No comments:

Post a Comment