Saturday, January 14, 2017

தடைகளை தகர்க்க ..

தீபாவளி நேரம் இரவு பத்து மணிக்கு ஊருக்கு கிளம்பினேன், ஆட்டோ எதுவும் கிடைக்க வில்லை. தீபாவளி கூட்டம் இருக்கும் திரும்ப முடியாது என மறுத்தனர். சில நிமிட அலைச்சலுக்கு பின் ஒரு வழியாக கிட்டியது. பத்து வாரத்துக்கு பின் இந்த வழியாக வருவதாக சொன்னார் ஓட்டுநர். இதற்கும் அவர் சேர் ஆட்டோ ஓட்டுபவர், ‘ரெண்டு பக்கமும் திறந்து வெச்சிருக்கானுங்க சார். காலைல இருந்து சம்பாதிக்கறது எதுவும் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியல’ என்றார். நல்லது பத்து மணிக்கு மேல் தான் அவரை அழைத்து வந்திருக்கிறேன் நிம்மதியாக ஊருக்கு போய் சேர்ந்தேன்.

கள்ளுண்ணாமை என சொல்லி கள் இரக்குதல் தடை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கள்ளச்சாராயம் வீதிக்கு வந்தது, அதனால் உயிர் பலிகள் அதிகரித்தது. இதை சரி செய்ய என மதுபான கடைகள் அரசாங்க அனுமதியோடு வந்து இன்று அதை அரசே பொறுப்பேற்று தெருவுக்கு ஒன்றாய் நடத்தியும் வருகிறது.

கள்ளு, கள்ள சாராயம், மேற்க்கத்திய மது பானங்கள் எல்லாமுமே போதை தரும். ஆனால் அது உடலில் செயல்படும் முறை வெவ்வேறு மாதிரி இருக்கும்.

கள், தென்னை மற்றும் பனை என மரங்களில் இருந்து இரக்கப்படுகிறது. உடல் சூட்டை நீக்கக் கூடியது. மேற்க்கத்திய மது பானங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும். அவர்கள் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு அது உகந்ததாக அவர்கள் பாரம்பரியத்தோடு விழாக்களில், திருமணங்களில் கூட இருக்கும்.இப்படி சூட்டை கிளப்பும் மதுவை நம் ஊர் தட்பவெட்ப நிலைக்கு குடிக்க உடல் கெட்டுவிடுகிறது.

கள்ளைத் தொடர்ந்து சேவ சண்டை தடை செய்யப்பட்டது. கோழி வளர்த்தால் முட்டை காசு கொடுக்கும், கோழியும் ஒரு வயதில் கறியாகி காசாகும். சேவல் சண்டைக்கு என வளர்க்கப்பட்டு, அது கோழிகளோடு கூடி நாட்டு கோழி முட்டையிட்டு வந்தது. சேவ சண்டை முற்றிலும் தடை செய்யப்பட நாளடைவில் நாம்  ப்ராயிளர் கோழிக்கு மாறி விட்டோம். வியாதிகளும் பெற்று விட்டோம். நாட்டு கோழி வளர்த்தவர்கள் நிலை மறந்து விட்டோம்.

இன்று சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. நாளையே காளைகள் அடி மாடுகளாகாது. பசுவுக்கு கருவூட்ட சினைகள் விற்கும் நிறுவனங்கள் பெருகும். அடுத்த தலைமுறை இனி காளை எதற்கு வளர்க்க வேண்டும் கருவூட்ட சினைகள் ஊசியில் ஏற்றப்படும் போது என கணக்கிட்டு காளைகள் வளர்ப்பு நிறுத்தப்படும். நாட்டு மாடுகள் வெளி நாட்டு காளையின் கன்றுகளை ஈன்று எடுக்கும். இப்படி நாட்டு மாடுகள் மெல்ல மெல்ல வெளி நாட்டு மாடுகளாக மாறிவிடும்.

வெளி நாட்டு உணவு என்பது தீங்கு இல்லை, ஆனால் உடல் உறுப்புகள் நாம் வாழும் இடத்திற்கு ஏற்ப அதன் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார் போல் மாறுபட்டிருக்கும். எனவே நாம் வாழும் மண்ணில் ஏறத்தாள 400 மையில் சுற்று வட்டாரத்தில் விளையும் உணவுகள் நம் உடலுக்கு ஏற்றதாக இருக்கும். மேற்க்கத்திய உணவுகள் தீங்கானவை இல்லை அது நம் உடலுக்கு ஒவ்வாதவை.

எனவே கள்ளை முற்றிலும் தடை செய்யாது அரசே கள்ளுக்கடைகளை இப்போது மேற்கத்திய மது பானங்கள் விற்பது போல் நடத்தி இருக்கலாம், பனை மரங்கள் மிஞ்சி இருக்கும். சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் என கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி அதிகரித்திருக்கும். 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது.

இன்று இவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளி நாம் அந்நிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறோம் என்பது நிதர்சனம். அந்நிய முதலீடு நாட்டின் வளர்ச்சி இல்லை வீழ்ச்சி தான். கிழக்கிந்திய நிறுவனம் பதினேழாம் நூற்றாண்டில் முதலீடு செய்ததின் பலன் சும்மார் 200 ஆண்டுகள் அடிமை இந்தியா. இது இன்னும்மொரு படை எடுப்பே வளர்ச்சி இல்லை.

பாரம்பரியம் முற்றிலும் தடை செய்யப்படும் போது அதன் விளைவுகள் கட்டாய மாற்றமாக இருக்கும். எந்த மாற்றம் நிகழும் போதும் அழிவுகள் அதிகம் இருக்கும். அதில் மிஞ்சியவையே மாற்றத்திற்கு உட்பட்டு வளரத் துவங்கும். இப்போது தேவை இல்லாத மாற்றத்தினால் அழிவுக்கு கட்டாயமாக தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இத்தகைய நிலையை தடுக்க, கள்ளுக்கடை, சல்லிக்கட்டு போன்றவை தகுந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு தொடரப் படவேண்டும். அதை விடுத்தது முற்றிலும் தடை என்பது அறிவுள்ளவன் செய்யும் செயல் இல்லை.


Sunday, January 8, 2017

புத்தரின் மனையாள்

லகில் இனம், மதம் என எல்லாவற்றிக்கும் முன்னரே தீண்டாமையைச் சந்தித்தவள் இவள். மாதவிடாய் காலத்தில் வரும் இரத்தம் தீட்டு என ஒதிக்கி வைக்கப்பட்டாள். அந்த நாட்களில் தொடுவதற்கே ஏற்றவளல்ல என புனித சடங்குகளில் இருந்த ஒதுக்கியே வைக்கப்பட்டிருக்கிறாள்.

தங்கள் பேரரசில் சூரியன் மறைவதே இல்லை என்று பெருமை பட்டுக்கொண்ட, இன்று ஒரு பெண் அரசியை கொண்ட இங்கிலாத்தில் 1918ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. முதல் பொதுத் தேர்தல் 1708ல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் என ஒடுக்கப்படவர்களுக்கு வாக்குரிமை 1870ல் வழங்கப்பட்ட போது கூட பெண்களுக்கு இல்லை, அவள் 1920ல் தான் பெற்றாள்.

இவள் இன்ன உடை தான் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள், இவள் அங்கம் தெரிந்தால் அவன் உணர்சிகள் தூண்டப்படும் என்று ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறதே தவிற பொது சித்தனை இல்லை. முறுக்கிய மீசை, பரந்த மார்பு என திரியும் ஆணைக்கண்டு அவள் உணர்சிகள் பொங்கக் கூடும் என்று ஆணை போர்த்திக்கொள்ள சொல்லும் மதங்கள் இங்கு இல்லை. உண்மையில் அவள் ஒரு மணி நேரத்தில் பல முறை உச்சம் அடைய முடியும், அப்படி பார்த்தல் அவள் உணர்சிகள் தூண்டப்பட்டால் பல கொலைகள் அன்றாடம் நடக்கும்.

கட்டிய மனைவியை விட்டு நாட்டியக்காரியிடம் சென்றவனை தலைவனாகக் கொண்ட சிலப்பதிகாரத்தை ஏற்றுக்கொள்பவர்கள் கூட மகாபாரதத்தை விமர்சிக்கும் போது திருமணதிற்கு மும்பு பிள்ளை பெற்றவள், ஐவரை திருமணம் செய்யும் பெண் நாயகியாக சொல்லும் கீழ்த்தரமான காவியம் என்று ஒரு பெண்ணின் நெறியை தொட்டே இடித்துரைப்பர்.

Prince Siddhattha & Princess Yasodhara's marriage
இப்படியாக அவள் கட்டுப்பாடுகளுக்குள் தான் இன்றும் தினிக்கப்பட்டிருக்கிறாள். பாற்கடலில் ஆதிசேசன் மேல் விஷ்ணுவின் திருவடிகளை பற்றியவாறு தான் லட்சுமி இருக்கிறாள். இங்கு குழந்தை இடை கூடுதலாக இருந்ததால் உறுப்பை கீறி அவள் பிரசவிக்கிறாள், பின்னர் எட்டு தையல்கள் போடப்பட்டு பிழைத்து வருகிறாள். அதை உணர்ந்த அவள் பெற்றோர் அவளை தாங்குகிறார்கள் அதற்க்கு பேரன் பிறந்ததில் மகிழ்ச்சி இல்லையோ உன்னை மட்டுமே தாங்குகிறார்கள் என்று உரும்பும் கணவர்களோடும் அவள் வாழ்கிறாள்.

நான் பார்த்தவரையில் என் தந்தை எந்த வீட்டு வேலையும் செய்தது இல்லை. என் அன்னை வீடிற்கு எதுவும் சம்பாதித்ததும் இல்லை. இப்போது காதலித்து மணமுடித்த கணவன் தான் சம்பாதிப்பதில் பாதி சம்பாத்தியமே பெற்றாலும் அகம்பாவம் இல்லாது இல்லறம் நடத்துகிறாள். அவள் காலையில் தூங்கும் கணவனுக்கு, அவன் பெற்றோருக்கு, மத்தியம் அவளுக்கும் சமைத்து கட்டி எடுத்துக்கொண்டு இனி ராத்திரி திரும்பி என்ன சமைக்க என்ற சிந்தனையோடே வேலைக்கும் ஓடி ஒரு பதவி உயர்வு பெற்றுவிட்டால் அவள் பல முறை தீக்குளிக்க வேண்டி இருக்கும். அவள் வேலை செய்யும் இடத்தில் அத்துனை ராவணன்கள், துட்சாதனங்கள், துரியோதனன்கள் உண்டு.

வேலைக்கு போகும் அவளை ஏன் வீட்டு வேலை வாங்குகிறீர்கள் என்று கேட்டால் சட்டென பெருமிதமாய் வரும் பதில் ‘என்ன சொன்னாலும் நானே செய்யறேன்றா’. இதையே தன் மகன் சொல்லி சரி என கால் நீட்டி அமர்ந்து கிடக்கும் தாயை நான் கண்டதில்லை. ஆனால் அதே வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருந்தால் அவள் பள்ளிப் பருவம் தொட்டே துவைக்கவில்லை என்றாலும் துணிகளை மடிக்க கற்றுக்கொடுக்கப் பட்டிருப்பாள். சமைக்கவில்லை என்றாலும் பாத்திரம் தேய்க்க கற்றுக்கொடுக்கப் பட்டிருப்பாள். இவன் தான் உண்ட தட்டை கூட கழுவாமல் வளர்க்கப்படிருப்பான்.

இனி அவளுக்கு சமமாக இவன் இருக்க பெற்றோர்கள் இனி இவனுக்கு வீட்டு வேலை செய்ய கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். அவள் இன்று சம்பாதிக்கவும் செய்கிறாள் இவனுக்கு மேலாகவே.


இப்படி மாற வேண்டியது அவளை சுற்றி இருப்பவர்கள் தான் அன்றி அவளில்லை. அவள் விருப்பம் போல் உடை அணிந்து, விம்பிய நேரத்தில் விரும்பிய இடத்திற்கு செல்ல பாதுகாப்பு இல்லை என்றால் அது அந்த நாட்டிற்க்கு கேவலமே அன்றி அவளின் விருப்பங்களின் பிழை இல்லை. இதை உணராதோர் ஆளும் நாட்டில் பெண்ணியம் ஏட்டுச் சுரைக்காயாக தான் இருக்கும். இவள் தான் பாதிக்கப்பட்டும் குற்றத்திற்கு காரணமாக பழியையும் சுமக்கிறாள். இது கேவலமான நாடு தான்.