Sunday, July 29, 2012

வேண்டுகோள்

கோபத்தையும், மகிழ்ச்சியையும் கண்ணாடிபோல் காட்டிய இம்முகம் வெளிறிப்போய்,
ஓடி ஆடிய கால்கள் ஓய்ந்து
எட்டி எட்டி பிடிக்க முயன்ற கைகள் விறைத்து
என் ஆவி பிரிந்து
இவ்வுடல் மட்டும் ஏதேனும் ஒரு தெருவில் –
கேட்பார் அற்று கிடக்குமாயின்,
அதன் அருகில் பதுங்கு குழிகள் இருக்கக் கூடும்
அதில் போட்டு போவோர் ஒவ்வொருவரும் ஒரு கை மண் தெளித்து போங்கள்
அருகில் கடல் இருப்பின் அதில் வீசிவிட்டு போங்கள்
காடெனில் விட்டு விட்டு போங்கள் இரையாகிப்போவேன்.
என்னோடு வந்தவர்களை வெற்றி வேகமாய் அழைத்திருக்கக்கூடும்
இல்லையேல் கொடுங்கைகள் அவர்களை நின்று நிதானிக்க விடாது விரட்டி இருக்கக்கூடும்.
காரணம் எதுவாயினும் இன்னும் முடிந்து விடவில்லை
ஒவ்வொரு விடியலும் புது ஆரம்பமே!
உணவுக்காக வரும் கூட்டம் நீங்கள் எனில்
என்னை உண்டு விடுங்கள்
சீரணம் ஆகும் போது உங்கள் குடல் வழி வண்டல் என வர மாட்டேன்
ரத்த நாளங்களில் புது ரத்தம் என பாய்ந்து வருவேன்
முன்னேரிச்செல்வோம்!



No comments:

Post a Comment